ARTICLE AD BOX
காபி என்பது உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஒரு பானம் என்பது உண்மை. காபியை எப்போ, எப்படி, எவ்வளவு அருந்துவது என்பதில் அடங்கியிருக்கிறது அது தரும் ஆரோக்கியம். கெட்டோஜெனிக் டயட் முறையில் பிரசித்தி பெற்றது புல்லட் காபி. இதிலுள்ள அதிகளவு கொழுப்பானது கல்லீரலுக்கு அழுத்தம் தரக்கூடியது.
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ரெகுலர் காபியை பால் சர்க்கரை இல்லாமல் அளவோடு அருந்தும்போது அதிலிருந்து கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் அதிகம்.
புதிதாய் இறக்கிய டிக்காஷனுடன் உப்பு சேர்க்காத பட்டர், தேங்காய் எண்ணெயிலிருந்து தயாரிக்கப்படும் மீடியம்-செயின் ட்ரைகிளிசரைடு (MCT) ஆயில் சேர்த்து தயாரிக்கப்படுவது புல்லட் காபி. இதில் கொழுப்புச் சத்து அதிகம். கார்போஹைட்ரேட்களின் அளவு குறைவு. இது உடலுக்கு தொடர்ந்து சக்தி தரக்கூடிய பானமாக உள்ளதால் கெட்டோஜெனிக் டயட்டைப் பின் பற்றுபவர்களுக்கும், அவ்வப்போது உண்ணாவிரதத்தை கடைப்பிடிப்போருக்கும் உகந்ததாக உள்ளது.
புல்லட் காபி, உடலில் இரத்த சர்க்கரை அளவு உயராமல் பாதுகாக்கவும், மனம் தெளிவு பெறவும் உதவி புரியும் காபியாகும்.
நீரில் கலந்து அருந்தப்படும் ரெகுலர் காபியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம். குறிப்பாக, ஃபேட்டி (Fatty) லிவர் உள்ளிட்ட கல்லீரல் நோய்கள் வரும் அபாயத்தைத் தடுக்கக் கூடிய க்ளோரோஜெனிக் அமிலம் (Chlorogenic Acid) ரெகுலர் காபியில் அதிகம் உள்ளது. ஏற்கனவே கல்லீரல் நோய் உள்ளவர்கள், ஒரு நாளில் இரண்டு கப்பிற்கும் அதிகமாக இந்த காபியை அருந்துவதால் ஃபைப்ரோஸிஸ் (fibrosis) எனப்படும் நார்க்கட்டிகள் மற்றும் சிரோஸிஸ் (cirrhosis) போன்ற கல்லீரல் நோய்களின் தீவிரம் குறைவதாக க்ளினிக்கல் அன்ட் எக்ஸ்பெரிமென்டல் ஹெபடாலஜி (Clinical and Experimental Hepatology) வெளியிட்டுள்ள ஜார்னலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கல்லீரல் புற்றுநோய் மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் இறப்புகளின் விகிதமும் குறைவதாக கூறப்பட்டுள்ளது.
இந்த இரண்டு வகைக் காபிகளில் கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு உகந்தது எது என்பதை இப்பொழுது பார்க்கலாம்.
புல்லட் காபியில் கொழுப்பு அதிகம். கார்போஹைட்ரேட்ஸ் குறைவு. அதனால் இது கேட்டோஸிஸ் எனப்படும் கொழுப்புகள் எரிக்கப்படும் நிலைக்குள் உடல் செல்வதற்கு உதவுகிறது.
கெட்டோஜெனிக் டயட் முறையை பின்பற்றுவோருக்கு கல்லீரல் கொழுப்பைக் குறைக்க இது உதவி புரியும். ஃபேட்டி (Fatty) லிவர் எனப்படும் கல்லீரல் நோய்க்கு முக்கிய காரணியாகக் கருதப்படும் சர்க்கரை, புல்லட் காபியில் சேர்க்கப்படுவதில்லை.
இதில் கலோரியின் அளவு அதிகம் (ஒரு கப் புல்லட் காபியில் 200-400 கலோரி). இதனால் உடல் பருமன் அதிகரிக்கும். ஃபேட்டி லிவர் நோய்க்கு ஒபிசிட்டி எனப்படும் உடல் பருமன் வழி கோலும். புல்லட் காபியை தினசரி காலை உணவுடன் எடுத்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்களுக்கு, கல்லீரலின் செயல்பாடுகளுக்கு உதவக்கூடிய நார்ச்சத்து, வைட்டமின்கள், மினரல்கள் போன்ற ஊட்டச்சத்துக்களின் குறைபாடு ஏற்படலாம்.
கல்லீரல் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்க விரும்புபவர்கள் ரெகுலர் காபியை சர்க்கரை மற்றும் பால் சேர்க்காமல் குடித்து வந்தால் அதிலுள்ள அதிகபட்ச நன்மைகளைப் பெறலாம். இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள், இதன் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணங்கள் மற்றும் கல்லீரல் என்சைம்களின் அளவை உயர்த்த உதவும் திறன் ஆகியவற்றைப்பார்க்கும்போது கல்லீரலின் சிறப்பான செயல்பாடுகளுக்கு நாம் ரெகுலர் காபியை தேர்ந்தெடுப்பதே நலம்.