ARTICLE AD BOX
அது ஒரு பொற்காலம்!
காஞ்சி பரமாசார்யாள் (ஶ்ரீ சந்த்ர சேகரேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள்) கால்நடையாக நாடெங்கும் ஒவ்வொரு ஊருக்கும் வந்து அருளுரை தந்த காலம்!
இளையாத்தங்குடி சதஸ், நாராயணபுரம் சதஸ், மதுரை சேதுபதி ஹைஸ்கூலில் தங்கி அருளுரை ஆற்றல், சென்னையில் பல இடங்களில் தங்கி உபந்யாசங்கள் செய்தல், மூதறிஞர் ராஜாஜி உட்பட அதை நேரில் வந்து இருந்து கேட்டு அனுபவித்தல் என்று இருந்த காலம்!
நாத்திகம் தன் கோர முகத்தைக் காட்டியபோது அதிசயிக்கத்தக்க விதமாக மார்கழி மாதம் ஒவ்வொரு சிறிய கோவிலிலும் கூட திருப்பாவையும் திருவெம்பாவையும் இதர பக்திப் பாடல்களும் லவுட் ஸ்ப்பிக்கரில் பெரிதாக ஒலி எழுப்ப வைத்து அனைவரையும் ஆனந்திக்க வைத்த காலம்!
அந்தக் காலத்தில் ஆசார்யாளின் சிறப்பு ஊடகமாக அவரது ஆசீர்வாதத்தையும் அருளுரைகளையும் பிரமிக்க வைக்கும் விதத்தில் வாரந்தோறும் ஒவ்வொரு தமிழ் இல்லத்திலும் சென்று சேர்க்கும் அரிய தெய்வீகப் பணியை கல்கி வார இதழ் மேற்கொண்டு அனைவரைது பாராட்டையும் பெற்றது.
இரண்டு ராஜாக்கள் என்று ஒரு கட்டுரை. ஒருவர் நடராஜா. இன்னொருவர் ரங்கராஜா! “இப்படி ஈருருவில் ஓருருவாக உள்ள நடராஜாவுக்கு உரிய திருவாதிரை, ரங்கராஜாவுக்கு உரிய வைகுண்ட ஏகாதசி இரண்டும் மார்கழி மாதத்திலேயே வருகிறது” என்று சுட்டிக்காட்டி இரு மூர்த்திகளையும் பிரார்த்தனை பண்ணுவோம் என்று அருளுரை முடிகிறது.
ஆறுகால் ஸ்தோத்திரம் என்று ஒரு தொடர். ஐம்பது வாரங்கள் தொடர்ந்த இந்த ஷட்பதி ஸ்தோத்திர விளக்கம் 3-12-1978 இதழில் முடிந்த போது அனைவருக்கும் தெரியாத ஷட்பதி பற்றிய பல ரகசியங்களை அறிந்து ஆத்திக அன்பர்கள் பரமானந்தம் கொண்டார்கள். இது 1932 வருட உரை என்பதால் காலத்தால் அழியாதபடி அச்சில் ஏற்றி அதற்கு சிரஞ்சீவித்வம் கொடுத்து நிரந்தரமாக்கியது கல்கி.
முடிவாக உள்ள கட்டுரையில் அவர், “பகவத்பாதாளே இந்த ஷட்பதியின் இரண்டாவது ஸ்லோகத்தில் ஶ்ரீபதியின் பாதாரவிந்தத்திலிருந்து தேவகங்கை பொழிகிறதைப் பற்றிச் சொல்லியிருப்பதைப் பார்த்தோம். ஜனன மரணமாகிய பவபயத்தை பகவானின் பாதம் போக்குகிறது என்று இங்கே நம் பகவத் பாதாள் சொல்கிறார் என்றால், அப்பைய தீக்ஷிதரோ ஆசார்ய பாஷ்யத்தையே ‘ஜனன ஹரணி’ (பிறவியைப் போக்குவது என்கிறார்!
ஸுப்ரம்மண்யர், அம்பாள் முதலியவர்களின் பாத கமலத்தில் தமது உள்ளம் வண்டாகப் படிய வேண்டும் என்று ஆசார்யாள் சொல்ல, ஆயிரம் வருஷத்துக்கு முந்திய கம்போடியா தேசத்துக் கல்லேட்டில், நம் ஆசார்யாளுடைய பாத கமலத்தில்
(அங்க்ரி பங்கஜ) ஸகல பண்டிதர்க:ளையுடைய தலைகளும் வண்டுக்கூட்டம் மாதிரி (நிச்சேக்ஷமூர்த்த அலிமாலா) மொய்த்துக் கொண்டிருப்பதாக ஸம்ஸ்கிருத ஸ்லோகம் இருக்கிறது. இதைப் பற்றியும் முன்னேயே சொன்னேன். (கல்கி 3-4-77ல் வெளியான “ஆறுகால் ஸ்தோத்திரம்) .... சுலபமாக நம்மை பவ ஸாகரத்திலிருந்து கரை சேர்ப்பது பகவானின் பாதகமலம் தான். அதுவே தான் “பகவத்பாதர்” என்றே சொல்லப்படுகின்ற நமது ஆசாரியாள்”” என்று இப்படி விவரித்து முடிக்கிறார்.
“கல்கி, கல்கி” என்று கூவியவாறே பேப்பர் போடுபவர் புதிய இதழை வாரந்தோறும் தரும் போது ஒவ்வொரு வீட்டிலும் அதை முதலில் யார் வாங்குவது என்ற போட்டி நடப்பது வழக்கம். முதலில் பெறுபவரே முக்கியமான அனைத்தையும் படித்து விட்டுத்தான் அடுத்தவருக்குத் தருவது வழக்கம்.
இரவில் வீட்டில் அனைவரும் அவரவரது வேலைகளை முடித்த பின்னர் கூடத்தில் அமர்ந்து ஒருவர் இந்த ஆசார்யாள் உபதேசக் கட்டுரையைப் படிக்க அனைவரும் கேட்டு ஆனந்திப்பது அந்தக் காலத்திய வழக்கம்.
ஒரு வள்ளலும் ஒரு நாணய சாலையும் என்று ஒரு கட்டுரை.
பெரியவர்களைத் தரிசிக்க வந்த ஒருவர், ‘நான் வள்ளலார் நகரிலிருந்து வந்திருக்கிறேன்’ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அத்தோடு தங்கசாலைக்கு இப்போது பெயர் இப்படி மாற்றப்பட்டிருக்கிறது என்கிறார். உடனே யாருக்கும் தெரியாத ஒரு பெரிய விளக்கத்தைப் பெரியவாள் கூறுகிறார். தங்க சாலை என்றால் தங்க நாணயங்கள் தயாரிக்கும் இடம் இல்லை அது. தங்கத்தின் மாற்று, எடை எல்லாம் சரியாக இருக்கிறதா என்று தட்டிப் பார்த்தே தெரிந்துக்கொள்ள டங்கம் என்று ஒரு கருவியை அந்தக் காலத்தில் உபயோகிப்பது வழக்கம். அந்த ஓசை ஜல்ஜல் என்று அந்தக் காலத்தில் இடைவிடாது கேட்டுக் கொண்டிருக்கும். ஆகவே அந்த இடத்திற்கு டங்க சாலா என்று பெயர். அது சம்ஸ்கிருதப் பெயர். அதைத் தான் நாம் இப்போது தங்கசாலை என்கிறோம்”
இப்படி ஒவ்வொரு கட்டுரையிலும் ஆன்மீக உயரத்தில் ஏற அருளுரைகளும் அன்றாட வாழ்வில் நாம் பார்க்கும் பலவற்றிற்கான சுவையான காரணங்களையும் அவர் விளக்கும் அழகே அழகு!
அதை வாரந்தோறும் பிரசுரித்த கல்கி இதழின் பெருமையே பெருமை!.
இவற்றை இடைவிடாது தொகுத்தார் கல்கி ஆசிரியக் குழுவில் பணீயாற்றிய ரா.கணபதி அவர்கள்.
அந்தக் கட்டுரைகளை (பைண்ட் செய்து வைத்து) இப்போதும் படிப்பவர்கள் பாக்கியவான்கள்!
கல்கி இதழுக்கு பரமாசார்யாளின் விசேஷ அனுக்ரஹம் உண்டு. அதற்கும் பல சம்பவங்கள் உண்டு. அதையும் அனைவரும் அறிவர்.
அந்தக் காலம் ஒர் பொற்காலம்!