கரூர்: மின்மோட்டாரை சரி செய்தபோது மின்சாரம் பாய்ந்து 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

3 days ago
ARTICLE AD BOX

கரூர்,

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே முன்னூர் ஊராட்சிக்குட்பட்ட கிரசர்மேடு என்ற பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் ஆழ்துளை கிணற்றில் உள்ள மின்மோட்டார் பழுதானது. இதையடுத்து அதனை சரி செய்வதற்காக ஒரு வாகனத்தில் முன்னூரை சேர்ந்த பாலசுப்பிரமணி (44 வயது), ஆரியூர் ஊராட்சி, நிமிந்தப்பட்டி கிராமத்தை சேர்ந்த சதீஷ் (30 வயது) ஆகியோர் அங்கு வந்தனர். பின்னர் கிணற்றில் இருந்த மின்மோட்டாரை வாகனத்தில் உள்ள எந்திரத்தின் உதவியுடன் மேலே தூக்கினர்.

பின்னர் மின்மோட்டாரை சரி செய்து அதனை எந்திரத்தின் உதவியுடன் கிணற்றில் இறக்கிக் கொண்டிருந்தனர். அப்போது மேலே சென்ற மின்கம்பியில், எந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த பெரிய குழாய் எதிர்பாராதவிதமாக உரசியது. இதனால் எந்திரம் முழுவதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. அப்போது அங்கு வேலை செய்து கொண்டிருந்த சதீஷ், பாலசுப்பிரமணி மீதும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனர். இதனால் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் க.பரமத்தி போலீசாருக்கும், மின்சார வாரியத்திற்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் மின்சார வாரியத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் இறந்து கிடந்த பாலசுப்பிரமணி, சதீஷ் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த பாலசுப்பிரமணிக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். சதீசுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மின்சாரம் பாய்ந்து 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Related Tags :
Read Entire Article