ARTICLE AD BOX
இரத்தசோகை உள்ளவர்கள் இரும்புச்சத்தை அதிகரிக்க எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கிய உணவு குறித்து இப்போது பார்ப்போம்.
இரும்புச்சத்தை அதிகரிக்கும் உணவுகள் குறித்து சித்த மருத்துவர் சிவராமன் ஹெல்த்தி தமிழ்நாடு என்ற யூடியூப் சேனலில் தெரிவித்த கருத்துக்களை இப்போது பார்ப்போம்.
வீடியோவின்படி, ரொம்ப சாதாரண, தீர்க்கக் கூடிய நோய் இரத்த சோகை. இரும்புச் சத்து குறைவால் ஏற்படும் இந்த நோய் அனீமியா என்று அழைக்கப்படுகிறது. பெண்களுக்கு 11-11.5, ஆண்களுக்கு 12-12.5 என்ற அளவில் உடலில் இரும்புச்சத்து இருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலானோருக்கு குறைவாக உள்ளது. குறிப்பாக பெண்களுக்கு 35% வரை குறைவாக உள்ளது.
இது நமது அன்றாட வாழ்க்கையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றாலும், ரத்த நாளங்கள் மிக மெல்ல சிதைவடையலாம். 40 வயதிற்கு மேற்பட்டோருக்கு சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு, இரத்த அழுத்தம், மனச்சோர்வு, மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகள் வருவது நமக்கு தெரியும். ஆனால் இவை எல்லாவற்றுக்கும் நாம் சிறு வயது முதல் இரும்புச்சத்தை குறைவாக வைத்திருப்பது முக்கிய காரணமாக இருக்கிறது.
குறிப்பாக பெண்களுக்கு கருவுறுதல் நேரத்தில் இரும்புசத்து குறைபாடு முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. மேலும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கும் இரும்புச்சத்து குறைபாடு முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே இரத்த சோகையை சிறுவயது முதலே சரி செய்துக் கொள்ள வேண்டும்.
இரும்புச்சத்து சற்று குறைவாக இருந்தால் உடனே மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. இதனை உணவின் மூலமே சரி செய்யலாம். சிறுதானியங்களில் ஒன்றான கம்பு இதற்கு மிகச் சிறந்தது. அரிசியை விட 8 மடங்கு இரும்புச்சத்து கம்புவில் அதிகம். வாரத்திற்கு இரண்டு முறை கம்புவை எடுத்துக் கொள்வது நல்லது. கம்பஞ்சோறாகவோ, கூழாகவோ, அடையாகவோ, தோசையாகவோ சாப்பிடலாம். இப்படியாக கம்பை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால், இரும்புச்சத்து படிப்படியாக அதிகரிக்கும்.
கறிவேப்பிலை, எள், அத்தி, பேரீட்சை போன்றவற்றிலும் இரும்புச்சத்து உள்ளது. ஆனால் குறைவாக உள்ளது. கம்பு தோசைக்கு, கருவேப்பிலை அல்லது எள்ளு சட்னி சேர்த்து சாப்பிட்டால் இரும்புச்சத்து மெல்ல மெல்ல அதிகரிக்கும்.