பிளிங்கிட் தளத்தில் ஒரு காலி பணியிடத்துக்காக 13, 451 பேர் விண்ணப்பம் செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் குயிக்காமர்ஸ் பிரிவில் செயல்படும் நிறுவனங்கள் வேகமான வளர்ச்சியை அடைந்து வருகின்றன. அந்த வகையில் குயிக்காமர்ஸ் பிரிவில் ஸெப்டோ மற்றும் பிளிங்கிட் ஆகிய நிறுவனங்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
குயிக் காமர்ஸ் பிரிவில் பெரிய அளவிலான போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் பிளிங்கிட் மற்றும் ஸெப்டோ நிறுவனங்கள் தங்களுடைய இருப்பை வலுப்படுத்திய வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் பிளிங்கிட் நிறுவனம் தங்களுடைய நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு ஆட்களை எடுத்து வருகிறது.

சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட் இன்ஜினியர் பணிக்காக பெங்களூரில் இருந்து பணியாற்றுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பதாக பிளிங்கிட் அறிவித்துள்ளது. இந்த வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியான 24 மணி நேரங்களில் 13,451 பேர் அதற்கு விண்ணப்பம் செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பான ஸ்கிரீன் ஷாட் எக்ஸ் தள பக்கத்தில் ஆயுஷ் என்பவரால் பகிரப்பட்டுள்ளது. அதில் பிளிங்கிட்டில் சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட் இன்ஜினியர் பணிக்கு 13,451 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் என்பது இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு விண்ணப்பம் செய்தவர்களில் 74 சதவீதம் பேர் என்ட்ரி லெவல் பணியாளர்களாக இருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 சதவீதம் பேர் சீனியர் லெவல் ஊழியர்களாக இருக்கின்றனர். 86 சதவீதம் பேர் இளநிலை பட்டப்படிப்பையும், 12 சதவீதம் பேர் முதுநிலை பட்டப்படிப்பையும், 1 சதவீதம் பேர் எம்பிஏவும் படித்திருக்கின்றனர்.
இந்த பதிவு சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு நிறுவனங்களும் தற்போது ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன, அதே வேளையில் புதிதாக படித்துவிட்டு வேலைக்காக வந்திருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில் வேலை வாய்ப்பு தேடி ஆயிரக்கணக்கானவர்கள் காத்திருக்கின்றனர் என ஒரு பயனர் கூறியுள்ளார்.
இந்த காலத்தில் புதிதாக நிறுவனத்தை தொடங்குவதை விட வேலை தேடுவதுதான் கடினம் எனக் கூறியுள்ளார் ஒரு பயனர் . இதுபோல வேலை வாய்ப்பு அறிவிப்பு வரும்போது விண்ணப்பம் செய்பவர்களில் 50 சதவீதம் பேர் என்ன வேலை என்றே தெரியாமல் விண்ணப்பம் செய்பவர்கள் என கூறியுள்ள ஒரு நபர், 30 சதவீதம் பேருக்கு அந்த வேலைக்கு பொருத்தமான திறமைகள் இருக்காது என்றும் 15 சதவீதம் பேர் நாம் போன் செய்தால் எடுக்கவே மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மீதமுள்ள 5 சதவீதம் பேர் அப்படியே நாம் வேலை வாய்ப்பு வழங்கினாலும் அதனை ஏற்க மாட்டார்கள் என கூறியுள்ளார்.
Written by: Devika