TN Agriculture Budget 2025: உற்பத்தி பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

வேளாண் பட்ஜெட் 2025:

வரும் 2025-26 நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் சட்டப்பேரவையில் நேற்று தொடங்கியது. அதன்படி, மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் தொடர்ச்சியாக இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார். காலை 9.30 மணிக்கு இந்த பட்ஜெட் உரை தொடங்க உள்ளது கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்தது முதல், வேளாண் பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போதைய திமுக அரசின் கடைசி பட்ஜெட் என்பதால், விவசாயிகளின் வாக்குகளை கவரும் விதமான அறிவிப்புகள் ஏதேனும் இடம்பெறுமா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயிகளின் எதிர்பார்ப்புகள்

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தொடர்ந்து ஐந்தாவது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். அந்த வகையில் இந்த பட்ஜெட்டில் உற்பத்தி பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு தேர்தலின் போது திமுக விவசாயிகளுக்கு என பல வாக்குறுதிகளை அற்வித்தது. குறிப்பாக நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.2500 ஆகவும், இதேபோன்று கரும்புக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை ரூ.4000 ஆகவும் உயர்த்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். ஆனால், அந்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. பட்ஜெட்டிலாவது அதற்கான அறிவிப்புகள் வெளியாகுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

கடன் தள்ளுபடி?

பட்ஜெட்டின் உரையில், விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படுமா? புதிய திட்டங்கள் ஏதேனும் அறிவிக்கப்படுமா? என்றும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றன. தேர்தல் வாக்குறுதியின் போது அளித்த நகைக்கடன் தள்ளுபடி கூட, முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுவது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் உரையும் இன்றைய அவை நடவடிக்கைகள் முடிவடைகின்றன.

தொடர்ந்து வரும் திங்கட்கிழமை கூடும் சட்டப்பேரவை வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை நடைபெறும். அதில், 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதமும், துறை சார்ந்த இரு அமைச்சர்களின் பதில் உரையும் இடம்பெறும். தொடர்ந்து, 24-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.