ஒரே இலக்கு

6 hours ago
ARTICLE AD BOX

என்.கே.மூர்த்தி

2026 தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றிப் பெற வேண்டும் என்பது திமுகவின் ஒரே இலக்கு, அவற்றை அடைவதற்கு ஒவ்வொரு தொண்டரும் திட்டமிட வேண்டும். அந்த திட்டங்களை ஒவ்வொரு நாளும் நடைமுறைப் படுத்த இப்போதே இறங்க வேண்டும். அதுதான் வெற்றிக்கான சுலபமான ஒரே வழிமுறை

2026 இல் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த கட்டுரை எழுதுகொண்டிருக்கும் இந்த நேரத்தில் திமுக கூட்டணிக்கு எதிராக பலமான எதிர்கட்சியோ அல்லது கூட்டணியோ ஒன்றும் இல்லை என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் திமுகவின் சித்தாந்த எதிரி பாஜகவின் வியூகத்தை குறைத்து மதிப்பிட முடியாது. அவர்கள் திமுகவை தோற்கடிக்க எதை வேண்டுமானாலும் செய்வார்கள், எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

அவர்கள் தமிழகத்தில் காலூன்ற மூன்று வகையான வியூகங்களில் முயற்சி செய்கிறார்கள் என்பதை அவர்களின் பேச்சு மற்றும் செயல்பாடுகளின் மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது.

  1. அரசியல் ரீதியாக தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்துவது, வன்முறையை தூண்டுவது. அதன் மூலம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுப்பது. இது பாஜக தலைவர்களின் பேச்சில் இருந்து வெளிப்படுகிறது.
  2. தமிழ்நாடு அரசு பதவிகளில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., பாஜக ஆதரவு உள்ள அதிகாரிகளை வைத்து திமுக அரசு நிர்வாகத்திலும் திமுக கட்சிக்குள்ளும், கூட்டணிக்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்துவது.
  3. ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை மற்றும் சிபிஐ போன்ற அமைப்புகள் மூலம் திமுக தலைவர், துணை முதல்வர் மற்றும் திமுக நிர்வாகிகளை சோதனை, ஊழல் என்கிற பெயரில் புனைக்கதைகளை உருவாக்கி பொய் பிரச்சாரம் செய்வது.

இது ஆர்எஸ்எஸ், பாஜகவின் திட்டம்.

இந்த மூன்று திட்டத்தின் அடிப்படையில் தான் அவர்கள் செயல்படுகிறார்கள் என்பதை தமிழ்நாடு பாஜக தலைவர்கள் முதல் அந்த கட்சியின் கடைசி தொண்டர்கள் வரை பேசுகின்ற பேச்சுக்களையும், செயல்பாடுகளையும் கூர்ந்து கவனித்தோம் என்றால் புரிந்துக் கொள்ள முடியும். அவர்கள் தமிழகத்திற்கு எவ்வளவு பெரிய ஆபத்தான செயல்களை செய்ய இறங்குகிறார்கள் என்பது தெளிவாக புரிந்துக் கொள்ள முடியும்.

திருக்குறளில் உள்ள அறநெறிகள் சாதி, மதம், மொழி, இனம் போன்ற வேறுபாடுகளை கடந்து உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் பொதுவான நூலாக திருக்குறள் இருக்கிறது. அதை எழுதிய திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசி, அவர் இந்து மதத்தை சேர்ந்தவர் என்று பேசி மக்கள் மத்தியில் வெறுப்பை விதைக்கிறார்கள். திருவள்ளுவர் மீது பற்று உள்ளவர்களை, அன்பு கொண்டவர்களை சீண்டி கோபப்படுத்துகிறார்கள். அதன் வாயிலாக கலவரத்தை தூண்ட முயற்சி செய்கிறார்கள்.

தந்தை பெரியாரை விமர்சனம் செய்கிறேன் என்ற பெயரில் அவர் பேசாத வார்த்தைகளை பேசியதாக அவதூறு பரப்புகிறார்கள். வேண்டுமென்றே பெரியார் ஆதரவாளர்களை வம்புக்கு இழுக்கிறார்கள். அதேபோன்று அம்பேத்கர் சிலைக்கு காவி சாயம் பூசி, நெற்றியில் விபூதி பூசி, அம்பேத்கர் தொண்டர்களை சண்டைக்கு அழைக்கிறார்கள். அதன் வாயிலாக அம்பேத்கர் விரும்பிகளை வீதிக்கு அழைத்து கலவரம் செய்ய காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

திமுக அரசுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்து வருகிறார்கள். திமுக அமைச்சர்களை வேண்டுமென்றே ஒருமையில் பேசி, திமுக தொண்டர்களுக்கு ஆத்தரமூட்டுகிறார்கள். இப்படி எல்லாம் பேசி, வெறுப்பை விதைத்து, தொண்டர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தினால் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி அதன் மூலம் திமுக அரசுக்கு நெருக்கடி கொடுப்பதே அவர்களின் திட்டம்.

அடுத்தது தமிழ்நாடு அரசு பதவிகளில் உள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி முதல் சாதி, மதநம்பிக்கையுடைய அதிகாரிகள், திமுகவிற்கு எதிரான அல்லது பாஜகவை விரும்புகின்ற அதிகாரிகள் , உளவுத்துறையை சார்ந்தவர்களை வைத்து திமுக அரசுக்கு நெருக்கடி கொடுக்க முயற்சி செய்து வருகிறார்கள்.

சில உளவுத்துறை அதிகாரிகள் திமுக அமைச்சர்களுக்கும், மாவட்ட செயலாளர்களுக்கும் நன்மை செய்வதைப் போல் ஊடுருவி சில உண்மையான தொண்டர்கள் மீது வீண் பழி சுமத்தி அவர்களை வெளியேற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இன்னும் கூடுதலாக சொல்ல வேண்டும் என்றால் திமுகவில் நீண்ட காலமாக இருந்து வரும் தலித் நிர்வாகிகள் மீதும், இஸ்லாமிய நிர்வாகிகள் மீதும் குற்றப்பத்திரிக்கை வாசித்து அவர்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் திமுகவிற்கு மொத்தமாக விழுகின்ற தலித் மற்றும் சிறுபான்மையினர் வாக்கு வங்கியை சிதைப்பது. திமுகவிற்கு எதிராக மடைமாற்றம் செய்கின்ற வேலையை செய்கின்றனர். இது ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் செயல் திட்டங்களில் ஒன்று.

திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் கவனமுடன் இருக்க வேண்டும்

இப்படி பல்வேறு வழிகளில், பல யுக்திகளை கையாண்டு திமுகவை வீழ்த்த வேண்டும் என்பது அவர்களின் நோக்கம். அவர்கள் தொண்டர்களோடு நெருங்கி பழகுவார்கள், நமக்கு நல்லது செய்வது போலவே மற்றவர்களைப் பற்றி தகவல் சேகரிப்பார்கள். திமுக தலைவரையும், அவருடைய செயல்பாடுகளையும் மெதுவாக விமர்சனம் செய்து ஆழம் பார்ப்பார்கள். மாவட்ட நிர்வாகிகளைப் பற்றி குறைகளை கூறி உங்களின் கருத்தை எதிர்பார்ப்பார்கள். இப்படிப்பட்ட சூழ்ச்சிக்கு ஒரு துளியும் இடம் கொடுத்து விடக்கூடாது. தலைவரைப் பற்றி வரும் விமர்சனங்களை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும். தமிழ்நாட்டில் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விட தகுதியான, நெஞ்சுரம் கொண்ட தலைவர் வேறு எவரும் இல்லை என்கிற பெருமிதத்தோடு அவர்களுக்கு பதிலளிக்க வேண்டும்.

உங்களுடைய “ஒரே இலக்கு” தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாப்பதில் இருக்க வேண்டும். அடுத்த தலைமுறையினரின் எதிர்காலம் பாதுகாப்பானதாக இருக்க கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாடு இப்போது போல் எப்போதும் அமைதி பூங்காவாக இருக்க வேண்டும். அடுத்த தலைமுறை பிள்ளைகள் நல்ல கல்வியை கற்று உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்றால் 2026ல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்பதில் உறுதியான எண்ணம் நமக்குள் இருக்க வேண்டும்.

ஹோமிங் பிஜன் என்ற ஒரு வகையான புறா இருக்கிறது. அது மிகவும் அசாதாரணமான ஒரு பறவை. அது எந்த திசையில் இருந்தாலும், தன்னுடைய கூட்டில் இருந்து எத்தனை ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும் சரி, மீண்டும் தன் கூட்டிற்குத் திரும்பி வருவதற்கான இயலறிவு கடந்த உள்ளுணர்வு அந்த புறாவிற்கு உள்ளது.

அந்த புறா ஒன்றை அதன் கூட்டில் இருந்து பிரித்து எடுத்து, வேறு ஒரு கூண்டிற்குள் போட்டு, அக்கூண்டை வேறு ஒரு பெட்டிக்குள் போட்டு, அந்தப் பெட்டியை ஒரு கனமான போர்வையால் மூடி , மூடப்பட்ட அந்தப் பெட்டியை ஒரு லாரியில் வைத்து ஏதெனும் ஒரு திசையில் 1000 மைல்களுக்கு அப்பால் ஓட்டி சென்று , லாரியில் இருந்து அந்தப் பெட்டியை வெளியே எடுத்து, போர்வையை விளக்கி , கூண்டைத் திறந்து, அந்தப் புறாவை வானில் எறியுங்கள். அது வானில் மூன்றுமுறை வட்டமடித்து தான் எங்கு இருக்கிறோம் என்பதை கணித்துவிட்டு, மீண்டும் தனது சொந்த கூட்டை நோக்கி பறந்து செல்லும். பூமியில் இந்த ஆற்றலைப் பெற்றுள்ள ஒரே உயிரினம் “ஹோமிங் பிஜன்” என்ற புறா மட்டுமே. அதற்கு அடுத்து மனிதனுக்கு அந்த திறன் இருக்கிறது.

மீண்டும் வலியுறுத்துகிறேன் உங்களுடைய ஒரே இலக்கு 2026இல் திமுக 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றிப் பெற வேண்டும். நம்மிடம் இலக்கு இருக்கிறது. அதை அடைவதற்கான வழிமுறைகளும் இருக்கிறது. அதனால் நாம் நிச்சயமாக வெற்றிப்பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் களம் காணுங்கள்.

திமுகவிற்கு எதிரணியில் உள்ள அதிமுக மிகவும் பலம் வாய்ந்த கட்டமைப்பு உள்ள ஒரு கட்சி தான். அந்த கட்சிக்கும் வெற்றிப்பெற வேண்டும் என்கிற இலக்கு இருக்கிறது. ஆனால் அவர்களிடம் தெளிவான வழிமுறை இல்லை. என்ன காரணத்திற்காக வெற்றிப்பெற வேண்டும் என்கிற தொலை நோக்கு பார்வை இல்லை. வெறுமனே வெற்றிப்பெற வேண்டும் என்று கருதுகிறார்களே தவிர, அவர்களிடம் மாநிலம் நலன் சார்ந்த கொள்கை இல்லை. அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாற்றம் அடைகிறார்கள்.

ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்திற்குள் நுழைந்ததும் தேசிய கீதத்தை பாட வேண்டும் என்று நிர்பந்தப் படுத்துகிறார், விதிமுறைகளை மீறி தமிழ்நாட்டின் மரபுகளை, மாண்புகளை சிதைக்க முயற்சி செய்கிறார். அந்த செயலை முக்கிய எதிர்கட்சியான அதிமுக வேடிக்கை பார்க்கிறது. அவர்களுக்கு அவர்கள் நலனைத் தவிர நாட்டு நலனைப் பற்றி சிறிதும் கவலை இல்லாதவர்களாக இருக்கிறார்கள். அதனால் தேர்தல் நேரத்தில் தடுமாறுகிறார்கள். அவர்களுக்கு தொடர் தொல்வி குறித்து பயம் ஏற்படுகிறது. அதிமுக தொண்டர்கள் நாளுக்கு நாள் சோர்வடைந்து வருகிறார்கள். தொடர் தோல்வியை கண்டு வேதனைப்படுகிறார்களே தவிர ஏன் தோல்வி அடைகிறோம் என்று ஆராய்ந்து பார்க்க மறுக்கிறார்கள். அதனால் அதிமுக என்கிற ஒரு ஆலமரம் நம் கண்ணெதிரே சீரழிந்து வருவதை பார்க்க முடிகிறது.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் 1979 மற்றும் 1989 ஆண்டுகளுக்கு இடையே ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 1979 ம் ஆண்டில் எம்பிஏ பட்டம் பெற்ற மாணவர்களிடம், உங்கள் எதிர்காலத்திற்கான தெளிவான, எழுத்துப் பூர்வமான இலக்குகளை நிர்ணயம் செய்து, அவற்றை அடைவதற்கான திட்டங்களை வகுத்து விட்டீர்களா? என்று ஆராய்ச்சியாளர்கள் கேட்டனர்.

அதில் வெறும் 3 சதவீதப் பட்டதாரிகளிடம் மட்டுமே தெளிவான, எழுத்துப் பூர்வமான, திடமான இலக்குகளும் திட்டங்களும் இருந்தது. அடுத்தது 13 சதவீதத்தினரிடம் இலக்குகள் இருந்தது. ஆனால் தெளிவான, எழுத்துப் பூர்வமான திட்டங்கள் எதுவும் இல்லை. மீதி 84 சதவீதம் மாணவர்கள் கல்லூரியை விட்டு வெளியே வந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை தவிர வேறு திட்டவட்டமான இலக்குகள் எதுவும் இல்லை.

சரியாக 10 வருடங்கள் கழித்து 1989 இல் அந்த ஆராய்ச்சியாளர்கள் அதே மாணவர்களை மீண்டும் சந்தித்து பேட்டி கண்டனர். தெளிவான, எழுத்துப் பூர்வமான இலக்குகள் நிர்ணயம் செய்யாத 13 சதவீதத்தினர், எந்தவோர் இலக்கையும் நிர்ணயித்திராத 84 சதவீத மாணவர்களை விட இரண்டு மடங்கு அதிகமாக சம்பாதித்துக் கொண்டிருந்தனர். ஆனால் இதில் மேலும் ஆச்சரியமான செய்தி என்னவென்றால், பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய போது தெளிவான, எழுத்துப் பூர்வமான திட்டங்களும், இலக்குகளும் வைத்திருந்த 3 சதவீத பட்டதாரிகள் மீதி உள்ள 97 சதவீத மாணவர்களை விடப் 10 மடங்கு அதிகமாக சம்பாதித்துக் கொண்டிருந்தனர். இந்த ஆராய்ச்சியில் நாம் புரிந்துக் கொள்ள வேண்டியது நம்மிடம் தெளிவான நோக்கங்களும், இலக்குகளும் இருந்தால் சுலபமாக வெற்றிப்பெறலாம் என்பதை ஆகும்.

மனித நடவடிக்கைகள் அனைத்துமே ஏதோ ஒரு வகையில் குறிக்கோளுடன் கூடியவை தான் என்று கிரேக்கத் தத்துவவியலாளர் அரிஸ்டாட்டில் கூறியுள்ளார். நீங்கள் உண்மையில் விரும்புகின்ற ஒன்றை நோக்கி, உங்களை வழிநடத்துகிற செயலை செய்து கொண்டிருக்கும் போதுதான் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். அப்படி இருக்கும் போது, நீங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான கேள்விகள்; உங்கள் இலக்குகள் என்ன? எந்த குறிக்கோள்களை நீங்கள் குறிவைத்துத் கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் எங்கு சென்றடைய விரும்புகிறீர்கள்? என்பதை உங்களுக்குள் கேள்வி எழுப்புங்கள்.

என்னுடைய நோக்கம் அல்லது குறிக்கோள் இந்த சமுதாயத்தில் மனித இனம் சமத்துவத்துடனும் சகோதரத்துடனும் வாழ வேண்டும். என்னுடைய இலக்குகள் 2026ல் திமுக 200 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி தமிழ்நாட்டில் மீண்டும் மு.க.ஸ்டாலின் தலைமையில் நெஞ்சுரம் கொண்ட ஆட்சி தொடர வேண்டும். அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறேன், தொடர்ந்து செய்வேன் என்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.

Read Entire Article