மன அழுத்தத்துக்கு நல்மருந்து செல்லப்பிராணி வளர்ப்பு!

2 hours ago
ARTICLE AD BOX

தனிமை என்றாலும் குடும்பத்தின் ஆதரவுடன் இருந்தாலும் எந்த நிலையிலும் மன அழுத்தம் எனும் டிப்ரஷனுக்கு ஆளாகாதவர்கள் இல்லை. காரணம் இன்றைய அவசரங்கள். எங்கும் எதிலும் வேகம் வேகம் என்று நிதானத்தை இழந்து மன அழுத்தத்தின் பிடியில் சிக்குகிறோம்.

இதிலிருந்து மீளவும் பரபரப்பான சூழலில் இருந்து நிதானமாக நம்மை மாற்றிக் கொள்ளவும் பெரிதும் உதவுகின்றன நாம் வளர்க்கும் செல்லப் பிராணிகள். அன்று கிராமத்தில் பெரும்பாலானவர்கள் பதட்டமின்றி வாழக் காரணமாக இருந்ததே அவர்கள் வளர்த்த மாடு, ஆடு, நாய், கிளி, கோழி, புறா, முயல் அல்லது பூனை போன்றவைதான்.

செல்லப்பிராணியின் ரோமங்களைத் தடவுவது நமது மனதையும் உடலையும் அமைதிப்படுத்தும். அதனுடன் அளவளாவி அரவணைப்பது 'நல்ல உணர்வு' கொண்ட ஹார்மோனான ஆக்ஸிடோசினை வெளியிடும். மேலும் நாய்களைப் போலவே மற்ற சில செல்லப்பிராணிகளும் தங்கள் முத்தமிடுதல் மற்றும் நக்குதல் மூலம் மசாஜ் போன்ற நன்மைகளைத் தருகின்றன.

செல்லப்பிராணிகளால் நமது தனிமையை விலக்கி தோழமை உணர்வை வழங்க முடியும். அவை மட்டுமே பெரும்பாலும் நமது பேச்சை எதிர்க்காமல் கேட்கும். நம் உணர்வுகளை சீராக்க உதவும். நமது துக்கம், கோபம் ஆகியவற்றைக் கூட உணர்ந்து ஆறுதல் தரும்.

அவற்றை நடைப்பயணத்திற்கு அழைத்துச் செல்வது நமக்கும் உடற்பயிற்சி மற்றும் புதிய காற்றை சுவாசித்து நலம் பெற உதவும். குறிப்பாக நேரம் ஒதுக்கி நிதானமாக செல்லப்பிராணியுடன் விளையாடுவது உங்களை மன அழுத்தத்திலிருந்து திசைதிருப்பும். உங்கள் மனநிலையை மேம்படுத்தும். கோபத்தைக் கட்டுக்குள் வைக்க உதவும். மேலும் செல்லப்பிராணிகள் எவ்வித நிபந்தனையின்றி நேசித்து நம்மை ஏற்றுக்கொள்வது தன்னம்பிக்கையுடன் சக்திவாய்ந்த மன அழுத்த நிவாரணியாகவும் இருக்கும்.

செல்லப்பிராணிகளுடன் பழகுவது பதட்டம் மற்றும் மன அழுத்த அளவுகளைக் குறைத்து மனநிலையை மேம்படுத்தி மனச்சோர்வை கட்டுப்படுத்தும். அவற்றுக்கு உணவு தந்து பராமரிப்பது சுயமரியாதையையும் நம்பிக்கையையும் அதிகரித்து மனநிறைவையும் தரும்.

செல்லப்பிராணிகளை உள்ளூர் மீட்பு அமைப்பிலிருந்து தத்தெடுப்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். அல்லது ஒரு விலங்கு காப்பகத்தில் தன்னார்வத் தொண்டு செய்வது செல்லப்பிராணிகளுடன் தொடர்பு கொள்ள வாய்ப்புகளை வழங்கும். நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் செல்லப்பிராணிகளுடன் நேரத்தை செலவிட செல்லப்பிராணி பராமரிப்பு அல்லது நாய் நடைப்பயிற்சியை அவர்களுக்கு வழங்குங்கள்.

செல்லப்பிராணிகள் அற்புதமான மன அழுத்த நிவாரணத்தையும் ஆறுதலையும் அளிக்கும் என்றாலும் அவற்றுக்கும் கவனிப்பும் கவனமும் தேவை என்பதை நிச்சயம் மனதில் பதியுங்கள்.

அவற்றுக்குத் தேவையான வசதிகளையும் முறையான பராமரிப்பையும் அன்பான சூழலையும் வழங்க நாம் தயாராக இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்தான் அவற்றை வளர்க்கும் செயலில் ஈடுபடவேண்டும்.

இதையும் படியுங்கள்:
மாதவிலக்கின் போது பெண்கள் உடற்பயிற்சி செய்யலாமா?
Dog
Read Entire Article