ARTICLE AD BOX
சில விஷயங்களை நம்மை அறியாமலேயே அல்லது உணராமலேயே செய்கிறோம். அவற்றில் ஒன்றுதான், ‘ஓவர் திங்கிங்’ எனப்படும் அதிகமாக சிந்திக்கும் பழக்கம். ஒருவர் மிகை சிந்தனையாளர் என்பதை உணர்த்தும் 6 அறிகுறிகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. கடந்த கால உரையாடல்களை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்ப்பது: மகிழ்ச்சியான மற்றும் இனிமையான தருணங்களை அவ்வப்போது நினைத்துப்பார்ப்பது மனிதர்களின் வழக்கம். ஆனால், ஓவர் திங்கிங் செய்பவர்கள் ஓயாமல் பழைய நிகழ்வுகளையும், வேண்டாத, மனதிற்கு துன்பம் தரும் உரையாடல்களையும் மீண்டும் மீண்டும் மனதிற்குள்ளே ஓடவிட்டுப் பார்ப்பார்கள். சில சமயம் மிக சாதாரணமான விஷயங்களைக் கூட நினைத்துப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இதனால் தற்போதைய வேலைகள் செய்வதில் தடைகள் ஏற்பட்டு அவற்றை முடிக்க முடியாமலேயே போகலாம்.
2. முடிவெடுப்பதில் போராட்டம்: மிகையாக சிந்திப்பவர்கள் மிகச் சிறிய விஷயங்களில் கூட முடிவெடுப்பதில் போராடுவார்கள். உதாரணமாக, மளிகைக் கடைக்குச் சென்றால் எந்த பிராண்ட் அரிசி, பருப்பு வகைகளை வாங்குவது என்று தீர்மானிக்க முடியாமல் நீண்ட நேரம் யோசிப்பார்கள். அதில் என்ன சத்து இருக்கிறது, அவற்றில் உள்ள நன்மை, தீமைகள் என்ன என்பதைப் பற்றி மனதிற்குள் நீண்ட நேரம் சிந்தனைப் போராட்டம் நடைபெறும். இது தவறான பொருளை தேர்ந்தெடுத்து விடுவோமோ என்கிற பயத்தினால் எழுவது.
3. தூங்குவதில் சிரமம்: இரவானால் உடலுக்குக் களைப்பு வந்து விடும். ஆனால், இவர்களின் மனம் பழைய நினைவுகளை நினைத்துக்கொண்டிருக்கும் அல்லது எதிர்காலம் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கும். அதனால் தூக்கம் வராமல் திண்டாடுவார்கள். இவர்களால் நிம்மதியான உறக்கத்தைப் பெற முடியாது.
4. மோசமாக யூகிப்பது: இவர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் நல்லவிதமாக யூகிக்க மாட்டார்கள். சாதாரண விஷயங்களில் கூட மிகவும் எதிர்மறையான, மோசமான முடிவுகள் உண்டாகும் என்று கற்பனை செய்துகொள்வார்கள். தனது நண்பருக்கு போன் செய்து அவர் எடுக்காவிட்டால் அவர் தன்னை புறக்கணிக்கிறார் என்று எண்ணிக் கொள்வார்கள். மாறாக, ‘அவர்கள் வேலை பளுவில் இருக்கிறார்கள் அல்லது போனை அட்டென்ட் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்கள்’ என்று அவர்களுக்கு நினைக்கத் தோன்றாது.
5. வேண்டாத கவலையில் மூழ்குதல்: சிறிய விஷயத்தை பிளான் செய்வதற்குக் கூட எக்கச்சக்கமாக சிந்திப்பார்கள். மாலை நேரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு உணவகத்துக்குச் சென்று டின்னர் சாப்பிடலாம் என்று முடிவு எடுத்தால் அதைப் பற்றி மகிழ்ச்சியாக எண்ணாமல் தேவையில்லாத சிந்தனையில் மூழ்குவார்கள். அந்த ஓட்டலில் உணவு நன்றாக இருக்குமா, நண்பர்களுக்கு உணவு பிடிக்குமா, சரியான நேரத்திற்கு அங்கே சென்று சேர்ந்து விடுவோமா என்று தேவையில்லாதவற்றைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.
6. எல்லாவற்றிலும் பிறருடைய அபிப்பிராயத்தை சார்ந்திருத்தல்: பிறருடைய கருத்துக்களைக் கேட்பதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால், ஓவர் திங்கிங் செய்பவர்கள் மிகச் சாதாரணமான விஷயங்களுக்குக் கூட அடுத்தவர்களுடைய அபிப்பிராயத்தை அல்லது அவர்களுடைய அங்கீகாரத்தை எதிர்பார்ப்பார்கள். அதேபோல, தாம் மற்றவரை காயப்படுத்தி விட்டோமா என்பது குறித்தும் அதிகமாக சிந்திப்பார்கள்.
மிகை சிந்தனையின் விளைவுகள்: அதீதமான, அதிகப்படியான சிந்தனை வாழ்க்கையையும் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் பாதிக்கும். தலைவலி, வயிற்று வலி போன்ற உடல் ரீதியான அறிகுறிகள் தோன்றும், இவற்றுடன் சேர்ந்து எந்த விஷயத்திலும் கவனம் செலுத்துவது கடினமாக இருக்கும். எனவே, அதீதமாக சிந்தனை செய்பவர்கள் இதிலிருந்து வெளியே வர முயற்சிகள் எடுக்க வேண்டும். தொழில் முறை ஆலோசகர்களை அணுகி அல்லது மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.