ARTICLE AD BOX
ஒடிசாவில் உள்ள பாஜக அரசு அனைத்து அரசுப் பள்ளிக் கட்டடங்களுக்கும் ஆரஞ்சு நிற சாயம் பூச முடிவு செய்துள்ளது. இதுகுறித்த உதாரண படத்துடன் கூடிய சுற்றறிக்கை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இது ஆளும் கட்சியின் கல்வியை காவிமயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதி என்று எதிர்க்கட்சியான பிஜேடி குற்றம்சாட்டியுள்ளது.
ஒடிசாவில் கடந்தாண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி முதல்முறையாக வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. நவீன் பட்நாயக்கின் கால் நூற்றாண்டு ஆட்சிக்காலமும் முடிவுக்கு வந்தது. அவரது ஆட்சியில் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் ஒரே சீராக பச்சை நிற வர்ணம் பூசப்பட்டிருந்தது. நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதாதள கட்சியில் பச்சை வர்ணம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது பாஜக ஆட்சி அமைந்தள்ள நிலையில் பச்சை வர்ணம் நீக்கப்பட்டு பாஜக கொடியில் உள்ள காவி நிறத்திற்கு பள்ளிகள் மாற உள்ளன.
இதற்கு எதிர்க்கட்சி கடும் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்த பதிலளித்த மூத்த பிஜேடி தலைவர் பிரசன்னா ஆச்சார்யா, ”பள்ளிக் கட்டடங்களின் நிறம் தொடர்பான முந்தைய அனைத்து அறிவுறுத்தல்களையும் இந்த உத்தரவு மீறும். இது சுத்தமாகக் கண்டிக்கத்தக்கது. இது ஒரு விசித்திரமான உளவியல். இந்த அரசாங்கம் ஏன் இத்தகைய போலி முடிவுகளை எடுக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. இதன் நோக்கம் என்ன? நிறங்களை மாற்றுவதன் மூலம் கல்வி முறையை மாற்ற முடியுமா? நிறங்களை மாற்றுவதன் மூலம் குழந்தைகளிடையே அதிக ஆற்றலைச் செலுத்த முடியுமா? பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுமிகளின் மனதில் அரசியலைப் புகுத்த பாஜக முயல்கிறது. மாநில கருவூலத்திலிருந்து கோடிக்கணக்கான ரூபாய் செலவழிக்கப்பட்ட அத்தகைய முடிவால் நேர்மறையான எதையும் அடைய முடியாது” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் நித்யானந்த் கோண்ட், “நாங்கள் பள்ளிக் கட்டடங்களின் நிறத்தை மாற்றவில்லை. பள்ளிச் சீருடைகளின் நிறங்களைக் கட்டடங்களுக்கு மாற்றியது பிஜேடி அரசுதான். இந்த முடிவு, ஒரு நல்ல சூழலை உருவாக்கும். மேலும் பள்ளிகள் கவர்ச்சிகரமானதாக இருக்கும்" என அவர் தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த ஆண்டு அக்டோபரில், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் பள்ளிச் சீருடைகளின் நிறத்தை பாஜக அரசு மாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.