ARTICLE AD BOX
இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கான கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி தொடங்க இருக்கிறது. 10 அணிகள் பங்கு பெற்று விளையாடும் இந்த தொடரின் ஒவ்வோர் அணியிலும் வெளிநாட்டு வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், ”இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு (ஐபிஎல்) வீரர்களை அனுப்புவதை உலகெங்கிலும் உள்ள மற்ற கிரிக்கெட் வாரியங்கள் நிறுத்த வேண்டும்” என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “ஐபிஎல் தொடரில் உலகில் உள்ள முன்னணி வீரர்கள் பலரும் கலந்துகொண்டு விளையாடுகிறார்கள். ஆனால் இந்திய வீரர்கள் மட்டும் எந்த நாட்டிற்கும் சென்று டி20 லீக் போட்டிகளில் விளையாடுவதில்லை. பிசிசிஐ அவர்களுக்கு அந்த அனுமதியை வழங்குவதில்லை.
எனவே அவர்களை போன்று எல்லா நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஐபிஎல் போட்டிகளுக்கு தங்கள் நாடு வீரர்களை அனுப்புவதை நிறுத்த வேண்டும். ஏனெனில் இந்திய வீரர்களை வெளிநாட்டு போட்டிகளில் விளையாடுவதற்கு அனுமதிக்காதபோது மற்ற நாடுகள் ஏன் இந்தியாவிற்கு சென்று விளையாட வேண்டும்? அவர்களைப் போன்ற நிலைப்பாட்டை நாம் ஏன் எடுக்கக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.
ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் உள்ளிட்ட இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் பிபிஎல், டபிள்யூசிபிஎல், ஹண்ட்ரட் போன்ற வெளிநாட்டு லீக்குகளில் விளையாடியுள்ளனர். ஆனால் பிசிசிஐ விதிப்படி, இந்திய கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச மற்றும் உள்நாட்டுப் போட்டிகளிலிருந்து முழுமையாக ஓய்வுபெற்ற பின்னரே மற்ற நாடுகளில் நடக்கும் லீக் தொடர்களில் விளையாட அனுமதிக்கப்படுவர். தினேஷ் கார்த்திக் கடந்த ஆண்டு ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன் பிறகு அவர் SA20இல் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். அதுபோல் ஓய்வுபெற்ற யுவராஜ் சிங் மற்றும் இர்பான் பதான் போன்றோரும் GT20 கனடா மற்றும் லங்கா பிரீமியர் லீக் போன்ற போட்டிகளிலும் பங்கேற்றுள்ளனர்.
ஐபிஎல்லைப் போன்று பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடர் நடத்தப்படுகிறது. இது, வரும் ஏப்ரல் 11 முதல் மே 18 வரை நடைபெற இருக்கிறது.