ARTICLE AD BOX
18-வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிக்கொள்ள உள்ளன.
கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) முதல் தொடங்கவுள்ளது. நாளை நடைபெறவுள்ள முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதையும் படிக்க: மும்பை இந்தியன்ஸ் அணி வலுவாக உள்ளதா? முன்னாள் ஆஸி. கேப்டன் கூறுவதென்ன?
இந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக அஜிங்க்யா ரஹானேவும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக ரஜத் படிதாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய கேப்டன்களின் தலைமையில் இரண்டு அணிகளும் களமிறங்குகின்றன.
நடப்பு சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளும் உத்வேகத்தோடு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், முதல் கோப்பைக்கான தேடலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் களமிறங்குகின்றன. சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி, நீண்ட நாள்களுக்குப் பிறகு டி20 போட்டிகளில் விளையாடவுள்ளார். இதனால், விராட் கோலியின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இதையும் படிக்க: சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்கில் சாம்பியன் பட்டம் வென்றது குறித்து மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்!
ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இதுவரை 34 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. நாளை போட்டி கொல்கத்தாவில் நடைபெறுவதால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. கொல்கத்தாவுக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு வெற்றி பெற்றுள்ளது. அதன் பின், வெற்றி பெறவில்லை.
இரண்டு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் நிறைந்துள்ளனர். இரண்டு அணிகளுக்கும் புதிய கேப்டன்கள் என்பதால், போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. புதிய கேப்டன்கள் இரண்டு பேரில் யார் முதலில் இந்த ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.