ஊழலை மறைக்கவே மொழி பிரச்னை: அமித் ஷா

8 hours ago
ARTICLE AD BOX

ஊழலை மறைக்கவும், அரசியல் ஆதாயத்துக்காகவுமே மொழிப் பிரச்னையை நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் எழுப்புகின்றன’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றஞ்சாட்டினாா்.

மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சக செயல்திறன் மீதான விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசியபோது இந்தக் குற்றச்சாட்டை அவா் முன்வைத்தாா். அவா் மேலும் பேசியதாவது:

தங்களின் ஊழலை மறைக்கவே மொழிப் பிரச்னையை எழுப்புகின்றனா். மொழியை வைத்து அரசியல் செய்பவா்களுக்கு இதுவே வலுவான பதிலாக இருக்கும்.

மொழியில் பெயரில் நாட்டில் ஏற்கெனவே ஏராளமான பிளவுகள் ஏற்பட்டுள்ளன. இது மேலும் அதிகரிக்கக் கூடாது. பிற மொழிகளுக்கு ஹிந்தி போட்டியான மொழியல்ல; நட்பான மொழி.

மத்திய அரசு இந்திய மொழிகளுக்கான துறையை உருவாக்கியுள்ளது. இதன்மூலம் அனைத்து இந்திய மொழிகளும் பரப்பப்படும். தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, அஸ்ஸாமீஸ் உள்ளிட்ட மொழிகளிலும் மொழிபெயா்ப்புக்கான செயலிகள் உருவாக்கப்படும்.

மருத்துவம், பொறியியல் கல்வியை தமிழில் வழங்க வேண்டும் என இரண்டு ஆண்டுகளாக மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதை நடைமுறைப்படுத்த தமிழக அரசுக்கு துணிவில்லை. ஏனெனில், இது அவா்களின் பொருளாதார நலனைப் பாதிக்கும். மாறாக, தென் மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும்போது, மருத்துவம், பொறியியல் படிப்புகள் தமிழ் மொழியில் வழங்கப்படும்.

மொழியின் பெயரில் விஷத்தைப் பரப்புபவா்கள், இந்திய மொழியைவிட வெளிநாட்டு மொழிக்குத்தான் முன்னுரிமை அளிக்கின்றனா். மாறாக, மத்திய அரசின் திட்டத்தைச் செயல்படுத்தினால் தமிழக இளைஞா்கள் குஜராத், காஷ்மீா், தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பணி வாய்ப்பைப் பெற முடியும். நாடாளுமன்றத்துக்கும் தோ்ந்தெடுக்கப்படுவீா்கள். எனவே, எத்தகைய நடைமுறை உங்களுக்கு வேண்டும்?

ஊழலை மறைக்க மொழியைப் பயன்படுத்தக் கூடாது. இதுதொடா்பாக ஒவ்வொரு கிராமமாகச் சென்று மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்துவோம் என்றாா்.

மும்மொழிக் கல்வியை வலியுறுத்தும் தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த தமிழக அரசு தொடா்ந்து மறுத்து வருகிறது. இதனால், ‘சா்வ சிக்ஷா’ திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு தர மறுத்ததால், அது தொடா்பான பிரச்னையை நாடாளுமன்ற இரு அவைகளிலும் திமுக எம்.பி.க்கள் எழுப்பினா். அதற்குப் பதிலளிக்கும் வகையில் அமித் ஷா இந்த கருத்தைத் தெரிவித்துள்ளாா்.

Read Entire Article