ARTICLE AD BOX

image courtesy: twitter/@IPL
லாகூர்,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
இந்த தொடர் தொடங்க இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் மற்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் தங்களது வீரர்களை இந்த தொடரில் பங்கேற்க கூடாது என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் - உல் - ஹக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "சாம்பியன்ஸ் டிராபியை விடுங்கள். ஐ.பி.எல். தொடரில் உலகில் உள்ள முன்னணி வீரர்கள் பலரும் கலந்து கொண்டு விளையாடுகிறார்கள். ஆனால் இந்திய வீரர்கள் மட்டும் எந்த நாட்டிற்கும் சென்று டி20 லீக் போட்டிகளில் விளையாடுவதில்லை. பி.சி.சி.ஐ. அவர்களுக்கு அந்த அனுமதியை வழங்குவதில்லை. எனவே அவர்களை போன்று எல்லா நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஐ.பி.எல். போட்டிகளுக்கு தங்கள் நாடு வீரர்களை அனுப்புவதை நிறுத்த வேண்டும். ஏனெனில் இந்திய வீரர்களை வெளிநாட்டு போட்டிகளில் விளையாடுவதற்கு அனுமதிக்காதபோது மற்ற நாடுகள் ஏன் இந்தியாவிற்கு சென்று விளையாடனும்? அவர்களைப் போன்ற நிலைப்பாட்டை நாம் ஏன் எடுக்க கூடாது?" என்று கூறினார்.
பி.சி.சி.ஐ. விதிப்படி, இந்திய கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகளிலிருந்து முழுமையாக ஓய்வு பெற்ற பின்னரே மற்ற நாடுகளில் நடக்கும் லீக் தொடர்களில் விளையாட அனுமதிக்கப்படுவர்.