ARTICLE AD BOX

image courtesy:twitter/@KKRiders and @RCBTweets
கொல்கத்தா,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இன்று தொடங்குகிறது. கடந்த 2008-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தொடர் 18-வது ஆண்டாக வீறுநடை போடுகிறது. இதுவரை நடந்துள்ள 17 தொடர்களில் அதிகபட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 5 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளன.
இந்த நிலையில் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்கி மே 25-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் இந்த இரு அணிகளின் பலம், பலவீனம் குறித்து இங்கு காணலாம்..!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:-
பலம்: நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புதிய கேப்டன் ரகானே தலைமையில் களமிறங்க உள்ளது. அந்த அணியில் குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர், சுனில் நரைன், ரசல், ரிங்கு சிங் ஆகிய அதிரடியில் மிரட்டக்கூடிய பேட்ஸ்மேன்கள் அணிவகுத்து நிற்கின்றனர். அதுபோக ரகானே, மனிஷ் பாண்டே, டி காக் ஆகிய அனுபவ வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். இதனால் அந்த அணி பேட்டிங்கில் சமநிலையை பெற்றுள்ளது.
பந்துவீச்சை பொறுத்த வரை அந்த அணியில் சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, அன்ரிச் நோர்கியா, ஹர்ஷித் ராணா ஆகியோர் அணிவகுத்தி நிற்கின்றனர். இதனால் பந்துவீச்சு துறை வலுவாக உள்ளது. இதில் வருண் சக்ரவர்த்தி மற்றும் ஹர்ஷித் ராணா நல்ல பார்மில் உள்ளனர்.
பலவீனம்: கொல்கத்தா அணி, கடந்த முறை கோப்பையை வென்று கொடுத்த கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயரை மெகா ஏலத்தில் விடுவித்தது பின்னடைவாக கருதப்படுகிறது. தற்போது நல்ல பார்மில் உள்ள அவரின் இடத்தை ரகானே நிரப்புவது கொஞ்சம் கடினம்தான்.
அதுபோக கடந்த மெகா ஏலத்தில் அனுபவம் வாய்ந்த இந்திய பந்துவீச்சாளர்களை ஏலத்தில் வாங்காதது பின்னடைவாக கருதப்படுகிறது. கடந்த சீசனில் பிளே ஆப் மற்றும் இறுதிப்போட்டியில் அசத்திய மிட்செல் ஸ்டார்க்கையும் இந்த முறை கொல்கத்தா கழற்றி விட்டுள்ளது.
மேலும் கடந்த முறை ஆலோசகராக இருந்த கவுதம் கம்பீர் தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக சென்று விட்டதால் அவரது இழப்பு நிச்சயம் அணியை பாதிக்க வாய்ப்புள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:-
பலம்: கடந்த 17 சீசன்களாக கோப்பையை வெல்லாத பெங்களூரு அணி இந்த முறை புதிய கேப்டன் ரஜத் படிதார் தலைமையில் களமிறங்க உள்ளது. அந்த அணியில் விராட் கோலி, பில் சால்ட், படிதார், ஜேக்கப் பெத்தேல், லியாம் லிவிங்ஸ்டன், டிம் டேவிட் என அதிரடி வீரர்கள் அணிவகுத்து நிற்கின்றனர். அனைவரும் ஒரே சேர அசத்தும் பட்சத்தில் அது நிச்சயம் அணிக்கு வலுவானதாக அமையும். அதுபோக ஜிதேஷ் சர்மா, படிக்கல் போன்ற வீரர்களும் உள்ளது அணிக்கு நல்லட் விதமாக அமைந்துள்ளது.
பந்துவீச்சை பொறுத்த இம்முறை இந்திய அணியின் முன்னணி வீரரான புவனேஷ்வர் குமாரை ஏலத்தில் வாங்கியது நல்ல விதமாக தெரிகிறது. மேலும் ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள், நிகிடி மற்றும் நுவான் துஷாரா, குருனால் பாண்ட்யா ஆகியோர் சிறப்பாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பலவீனம்: அந்த அணியில் பேட்டிங் துறை பலவீனமாக தெரியவில்லை. பந்து வீச்சை பொறுத்த வரை முன்னணி வீரரான சிராஜை கழற்றி விட்டது பின்னடைவாக கருதப்படுகிறது. அதுபோக தரமான சுழற்பந்து வீச்சாளரையும் அந்த அணி ஏலத்தில் வாங்கவில்லை. இது இந்த சீசனில் பெங்களூரு அணியின் முக்கிய பலவீனமாக கருதப்படுகிறது.
மேலும் கடந்த சீசனில் பிளே ஆப் சுற்றுக்கு செல்வதில் முக்கிய பங்கு வகித்த வில் ஜாக்சையும் கழற்றி விட்டுள்ளது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.