ARTICLE AD BOX

image courtesy: twitter/@IPL
கொல்கத்தா,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இன்று தொடங்குகிறது. கடந்த 2008-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தொடர் 18-வது ஆண்டாக வீறுநடை போடுகிறது. இதுவரை நடந்துள்ள 17 தொடர்களில் அதிகபட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 5 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளன.
இந்த நிலையில் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்கி மே 25-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேற்கு வங்காள மாநிலத்தில் கொல்கத்தா உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மழையால் கொல்கத்தா அணியினரின் பயிற்சி பாதிப்புக்குள்ளானது. இன்றைய தினம் மழை பெய்ய 70-90 சதவீதம் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே நேற்று முதல் ஈடன் கார்டனில் விட்டு விட்டு மழை பெய்து வருவதாகவும் தெரிகிறது.
இதனால் இந்த ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது. ஒருவேளை மழை காரணமாக இந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்படும். ஐ.பி.எல். தொடரில் லீக் போட்டிகளுக்கு ரிசர்வ் டே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.