ARTICLE AD BOX

புதுடெல்லி,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இன்று தொடங்குகிறது. கடந்த 2008-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தொடர் 18-வது ஆண்டாக வீறுநடை போடுகிறது. இதுவரை நடந்துள்ள 17 தொடர்களில் அதிகபட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 5 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளன.
இந்த நிலையில் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்கி மே 25-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்திய வீரர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு முன்னணி வீரர்களும் இணைந்து விளையாடுவதால் இந்த சரவெடி கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் அமோக வரவேற்பு உண்டு. இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்புள்ள அணிகள் குறித்த விவாதங்கள் தற்போதே சமூக வலைதளங்களில் எழ ஆரம்பித்து விட்டன.
இந்நிலையில் இந்த தொடரில் வெற்றி பெற வாய்ப்புள்ள அணி குறித்து தனது கணிப்பினை இந்திய முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஆன சேவாக் வெளிப்படுத்தியுள்ளார்.
அவரது கணிப்பின் படி, ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி கோப்பையை வெல்லும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் கே.எல்.ராகுல் அதிக ரன் குவித்த வீரராகவும், வருண் சக்ரவர்த்தி அதிக விக்கெட் வீழ்த்தியவராகவும் இருப்பார்கள் என்றும் கணித்துள்ளார்.
5 முறை சாம்பியன்களான சென்னை, மும்பை மற்றும் நடப்பு சாம்பியன் ஆன கொல்கத்தா அணிகளை தாண்டி இவர் லக்னோ அணியை கணித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.