ARTICLE AD BOX
துபாய்,
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக ஒருநாள் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.
இதன்படி பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய வீரர் சுப்மன் கில் (796 புள்ளிகள்) 2-வது இடத்தில் இருந்து முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 2 அரைசதம், ஒரு சதம் என்று 259 ரன்கள் குவித்ததன் மூலம் இந்த ஏற்றத்தை கண்டுள்ளார். இவர் நம்பர் 1 இடத்தை அலங்கரிப்பது இது 2-வது முறையாகும். பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் (773 புள்ளிகள்) 2-வது இடத்துக்கு சரிந்தார்.
இந்திய கேப்டன் ரோகித் சர்மா (761 புள்ளிகள்3-வது இடத்திலும், விராட் கோலி (727 புள்ளிகள்) 6-வது இடத்திலும் நீடிக்கிறார்கள். ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு இடம் முன்னேறி 9-வது இடத்தில் உள்ளார். டாப் 10 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர்கள் 4 பேர் இடம்பிடித்து ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.