ARTICLE AD BOX
பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் தற்போது ஆம் ஆத்மியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் லூதியானா மேற்குத் தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏவான குர்பிரீத் கோகி தனது துப்பாக்கியை சுத்தம் செய்தபோது ஏற்பட்ட தற்செயலான நிகழ்வில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். இதையடுத்து அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.
இந்த தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சீவ் அரோரா நிறுத்தப்பட்டுள்ளார். அவர், 2022ஆம் ஆண்டு பஞ்சாபிலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் 2028இல் முடிவடைய உள்ளது. ஓர் உறுப்பினர் இரண்டு பதவிகளை வகிக்க முடியாது என்பதால், அவர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக பட்சத்தில், எம்பியை பதவியை ராஜினாமா செய்வார்.
அப்படியானால், அவரது காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் தேர்வு செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே இடைத்தேர்தலில் நிறுத்தப்பட்டிருக்கும் சஞ்சீவ் அரோரா , "லூதியானா மேற்கு இடைத்தேர்தலில் போட்டியிட என் மீது நம்பிக்கை வைத்த ஆம் ஆத்மி கட்சியின் தலைமைக்கு பணிவாகவும் நன்றியுடனும் இருக்கிறேன். எனது சொந்த ஊருடன் ஆழமாக இணைந்த ஒருவராக, எனது மக்களுக்கு அர்ப்பணிப்பு மற்றும் நேர்மையுடன் சேவை செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், சஞ்சீவ் அரோரா கட்சித் தலைவருக்காகத்தான் தனது பதவியை விட்டுக்கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. தவிர, இடைத்தேர்தலில் அவர் வெற்றிபெற்றால் பகவந்த மான் மாநில அரசில் அமைச்சராகும் வாய்ப்பும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மறுபுறம், கடந்த ஆண்டு முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அரசு பங்களாவையும் காலி செய்திருந்தார். அவர் தற்போது டெல்லியில் மற்றொரு பஞ்சாப் எம்பி அசோக் மிட்டலின் வீட்டில் வசித்து வருகிறார். இதன்மூலம் அவர் மாநிலங்களவை எம்பியாகி தேசிய அரசியலில் கவனம் செலுத்தலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இதுதொடர்பாக விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி இதுவரை அத்தகைய நடவடிக்கையை மறுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர், ”இதுபோன்ற செய்திகள் முற்றிலும் தவறானவை. அரவிந்த் கெஜ்ரிவால் மாநிலங்களவைக்குப் போகவில்லை. அரவிந்த் கெஜ்ரிவாலைப் பொறுத்தவரை, அவர் பஞ்சாப் முதல்வராக வருவார் என்று ஊடக வட்டாரங்கள் முன்பே கூறி வந்தன. இப்போது, அவர் மாநிலங்களவையில் போட்டியிடுவார் என்று ஊடக வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த இரண்டு ஆதாரங்களும் முற்றிலும் தவறானவை. அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர். அவரது கோரிக்கை மிக அதிகமாக உள்ளது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன், ஆனால் அவர் எந்த ஒரு இடத்திலும் மட்டும் நிற்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.