ARTICLE AD BOX
நாட்டின் மொத்த மக்கள் தொகை 150 கோடிக்கும் அதிகமாக உள்ளது. பெருகி வரும் நாட்டின் மக்கள் தொகையும், இந்தியர்களின் உணவு முறையும், எண்ணெய்கான தினசரி தேவையை உணர்த்துகிறது. ஒவ்வொருவர் உணவிலும் ஒரு ஸ்பூன் எண்ணெய் கட்டாயம் இருக்கும். அப்போது 150 கோடி மக்கள் தொகைக்கும் போதுமான எண்ணெய் உற்பத்திக்கு உள்நாட்டை மட்டும் நம்பி இருக்க முடியாது. பாரம்பரிய எண்ணெய் வித்துக்கள் விலையும் அதிகம் என்பதால் இறக்குமதி எண்ணெய் வகைகளையே இந்தியர்கள் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர்.
இந்தியாவும் தங்கள் சமையல் எண்ணெய் தேவையில் 70% மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. இதனால்தான் இந்தியாவின் இறக்குமதிச் செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் சமையல் எண்ணெயின் சந்தை மதிப்பு 3.20 லட்சம் கோடி ஆகும். ஆண்டிற்கு 159 லட்சம் டன் எண்ணெயை இறக்குமதி செய்கிறது. இந்தியாவின் சமையல் எண்ணெயின் சந்தை உலகிலேயே மிகவும் பெரியது. இதில் குறிப்பிட தகுந்த விஷயம் என்னவென்றால், இந்தியா தனது சமையல் எண்ணெய் தேவைக்கு பிற நாடுகளையே நம்பி உள்ளது.
இந்தோனேசியா நாடு தான் மிகப்பெரிய அளவில் சமையல் எண்ணெயை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்கிறது. முன்பு மலேசியாவில் இருந்துதான் இந்தியா அதிக கொள்முதலை செய்தது. இந்தோனேஷியாவிடம் 2024 ஆம் ஆண்டில் 482 ஆயிரம் டன் எண்ணெயை இந்தியா கொள்முதல் செய்தது. அதன் பிறகு அர்ஜென்டினாவில் இருந்து 359 ஆயிரம் டன், மலேசியாவிலிருந்து 314 ஆயிரம் டன், ரஷ்யாவிலிருந்து 226 ஆயிரம் டன், உக்ரைனிலிருந்து 115 ஆயிரம் டன், பிரேசிலிருந்து 22 ஆயிரம் டன், தாய்லாந்திலிருந்து 12 ஆயிரம் டன் மற்றும் வேறு சில நாடுகளிலிருந்து 56 ஆயிரம் டன் எண்ணெயை இந்தியா கொள்முதல் செய்தது.
இந்நிலையில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியை உயர்த்த செப்டம்பர் 2024 இல், இந்தியா கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தாவர எண்ணெய்களுக்கு 20% அடிப்படை சுங்க வரியை விதித்தது. இதனால் கச்சா பாமாயில், கச்சா சோயா எண்ணெய் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய் மீது 5.5% இருந்த இறக்குமதி வரி 27.5 % ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் மீதான வரி இப்படி இருக்க சுத்திகரிக்கப்பட்ட மூன்று எண்ணெய்களின் மீது 35.75% இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.
உலகின் அனைத்து நாடுகளுடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டில் இந்தியா அதிகபட்சமாக ரூ.3.21 லட்சம் கோடி வருவாயை ஈட்டும். இந்த சந்தை ஆண்டுதோறும் 4.25% வளர்ச்சியடைகிறது.
2025 ஆம் ஆண்டில் சமையல் எண்ணெய் உபயோகத்தில் தனிநபர் சராசரி அளவு ஆண்டிற்கு 5.18 கிலோவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தரவுகளின் படி இந்தியாவில் ஆண்டுதோறும் 159 முதல்162 லட்சம் டன் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. 2026 ஆம் ஆண்டில் சமையல் எண்ணெய் சந்தை 1.3% அளவு வளர்ச்சியைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமையல் எண்ணெய் சந்தையில், 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியா 7.99 பில்லியன் கிலோவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமையல் எண்ணெய் சந்தையில் இந்தியா உலகில் பெரியதாக இருந்தாலும் , பெரும்பாலும் இறக்குமதியை நம்பியே உள்ளது. திடீரென்று இறக்குமதியை குறைக்கவும் முடியாது, உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிக்கவும் முடியாது.
ஆயினும் மக்கள் எண்ணெய் பயன்பாட்டை சரியான முறையில் வைத்துக் கொள்ள வேண்டும். அதிக எண்ணெய் பயன்பாடு ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.