ARTICLE AD BOX
வழக்குகளுக்கு பயந்து அடிபணியும் தலைமை திமுகவும் அல்ல, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அல்ல என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உறுதிபட தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி சென்னை செம்பியம் பகுதியில் திமுக சார்பில் ” ஒன்று கூடுவோம் வென்று காட்டுவொம், என்றும் இணக்கமாய் நின்று காட்டுவோம்” எனும் தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது, பீட்டர் அல்போன்ஸ் பேசியதாவது:- வரலாற்றில் ஒரு சிலருடைய பிறந்தநாளைத்தான் ஒட்டுமொத்த சமூகமும் கொண்டாடும் நாளாக பார்க்கிறது. அப்படிபட்ட பிறந்தநாளாக இன்று நம் முதலமைச்சர் பிறந்தநாள் அமைந்துள்ளது. இன்று தமிழகத்தில் தடுக்கி விழுந்தால் அரசியல் கட்சிதான். திருமாவளவன் நாளை விழுப்புரத்திலேயே விசிக தேசிய ரீதியாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்ற நாளை வெற்றி விழாவாக கொண்டாடுகிறார். இந்த அங்கீகாரம் பெறுவதற்கான அவருடைய பயணத்தினுடைய விலை, அவர் கொடுத்திருக்கிற உழைப்பு, சந்தித்திருக்கும் சவால்கள் உள்ளிட்டவற்றை பார்த்து இன்றுதான் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும் நிலைக்கு அவர் வளர்ந்திருக்கிறார்.
ஆனால் 8 நாள் கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் முதலமைச்சர் ஆக வேண்டும் என எண்ணுகின்றனர். மக்களை சந்திக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. போராட்டக்களங்களில் தலைமை தாங்க வேண்டிய அவசியம் இல்லை. சினிமா கவர்ச்சியும், சாதிய பின்புலமும் இருந்தால் போதும் அரசியல் கட்சியை நடத்த முடியும். அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்கிற அரசியல் சூழல் மாறி இருக்கிறது. சாதி, மதம் இல்லாமல், எவ்வித வெறிகள், தூண்டுதல் இல்லாமல் 8 கோடி தமிழர்களின் தலைவராக தன்னை அடையாளப்படுத்தி கொண்டிருக்கிற ஸ்டாலின் போன்ற தலைவர்கள் தான் இந்த நாட்டின் எதிர் காலத் தேவையாகும்.
கலைஞரை விட ஒரு படி மேலே சென்று செயல்படுகிறார் நம் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஒவ்வொரு வார்த்தைகளையும் அளந்து அளந்து பேசக்கூடிய அற்புதமான பெரிய மனிதர் கலைஞர். உணர்ச்சி வசப்பட மாட்டார். ஆதாயத்திற்காக யாரையும் புகழ்ந்து பேச மாட்டார். உள்ளதை உள்ளபடி சொல்லி, நேர்மையோடு எளிமையோடு ஏறக்குறைய 60 ஆண்டு கால பொது வாழ்க்கையை பார்க்கின்ற ஒரு புனிதமான மனிதர் என்று அடிக்கடி சொல்வேன். கலைஞர் சந்தித்த, பார்த்த இந்தியா வேறு. நம் ஸ்டாலின் சந்திக்கும் இந்தியா மோடி, அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நச்சு வேர்கள் நாடு முழுவதும் பரவி இருக்கிற இந்தியா.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அங்கீகாரம் இல்லாமல் நடத்துகிறது பாஜக. இன்றைக்கு தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களை பார்த்து அநாகரீகமாக பேசினார் தர்மேந்திர பிரதான். தமிழில் சொல்வதென்றால் காட்டுமிராண்டி என்று அர்த்தம். அவ்வளவு தைரியமான ஒரு வார்த்தையை ஒரு அமைச்சர் சொல்கிறார். அவரது ஒடிசா மாநிலத்தில் சென்று 10 நாட்கள் தங்கினால் வாழ வேண்டும் என்ற ஆசையே போய்விடும். நாட்டின் மிகவும் பின்தங்கிய ஒரு மாநிலத்தில் வந்த ஒரு அமைச்சர் யாரை பார்த்து சொல்கிறார். உலக நாகரீகத்திற்கு முகவரி எழுதிய நம்மை பார்த்து, அன் சிவிலைஸ்டு என்று சொல்லுகிறார். இதுபோன்ற ஒரு சம்பவம் இந்திரா காந்தி, வாஜ்பாய் காலத்தில் இது நடந்திருந்தால் அவர்களே பகிரங்கமாக வருத்தம் தெரிவித்திருப்பார்கள். ஆனால் இன்றுள்ள பிரதமர் இதை பற்றி கவலைப்படவில்லை. அப்படி பட்ட ஒரு பிரதமரை எதிர்கொள்ளும் முதலமைச்சர், நம் முதலமைச்சர். அதுதான் அவர் ஒரு வார்த்தை சொன்னார் நாக்பூரின் நாசகார அரசியல். அதற்கு அடிபணிய மாட்டேன்.
மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி கேரளாவுக்கு வருகிறார். அவரை இந்த நாட்டிற்கு சுதந்திரம், அரசியலமைப்பு சட்டம் வேண்டாம் என்று சொன்ன ஆர்.எஸ்.எஸ் கும்பல் மறிக்கிறது. மகாத்மா காந்தியின் பேரனை வரக்கூடாது என்று சொல்லும் நீ, சுதந்திரத்திற்காக என்ன செய்தார்கள். இந்த நாட்டினுடைய இஸ்லாமியர்கள் இன்று கண்ணீர் வடிக்கின்றனர். ஹோலி பண்டிகையின்போது உ.பி யில் தார்ப்பாய் போட்டு பள்ளிவாசலை மறைத்து வைத்துள்ளனர். மகாராஷ்டிராவில் ஒவ்வொரு இறைச்சி கடைகளிலும் எந்த மதத்தினர் நடத்துகின்றனர் என்று எழுதி வைக்க வேண்டும் என்று அம்மாநில அமைச்சரே சொல்கிறார். இப்படிப்பட்ட இந்தியாவில் ஹஜ் போகும் இஸ்லாமியர்களுக்கு ரூ.66 கோடியில் விமான நிலையத்திற்கு அருகில் ஹஜ் மாளிகை கட்டிக்கொடுக்கும் முதலமைச்சர் நம் முதலமைச்சர்.
பணக்காரர்கள், பெரும் சாதிக்காருக்கு சாதகமான முதலமைச்சர் இல்லை, யாருக்கு குரல் இல்லையோ, யார் ஜனநாயகத்தில் மிகவும் நலிந்தவர்களாக இருக்கிறார்களோ, யாருக்கு அரசின் உதவியும், பாதுகாப்பும் தேவைப்படுகிறதோ அவர்களோடு பாதுகாப்பாக இருப்பதுதான் ஒரு பண்பட்ட முதலமைச்சர். இன்றைக்கு அவர் தான் குரல் கொடுக்கிறார். இந்தியாவில் எந்த மாநில முதலமைச்சருக்கும் தைரியம் இல்லை. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இந்த தேர்தல் அல்ல, எந்த தேர்தலிலும் பாஜக உடன் உறவில்லை, அதிமுக கூட்டணி சேராது என்று எடப்பாடி பேசினார். இன்றைக்கு அவர் என்ன பேசுகிறார். ஆந்திராவின் முதல்வர், துணை முதல்வர் என்ன பேசுகிறார்கள்.
இந்தியாவில் பாஜகவின் கொள்கையை ஆதரித்த முதலமைச்சர்களின் நிகழ் காலத்தை நாம் பார்க்கிறோம். பாஜக உடன் போன நவீன் பட்நாயக், சந்திர சேகர்ராவ், ஜெகன் மோகன் ரெட்டி போன்றோர் அதிகாரத்தை, ஆட்சியை இழந்தார்கள். இங்கிருக்கும் எடப்பாடி பழனிசாமி, பாஜக உடன் சேர்ந்து கட்சியை தொலைத்துவிட்டு நடுத்தெருவில் நிற்கிறார். ஆனால் கொள்கையை சுமந்த ஸ்டாலின் ஆட்சி இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி 8 கோடி தமிழர்களின் நெஞ்சத்தில் நீங்காத இடத்தை பெற்ற தலைவராக இருப்பார். அதனால்தான் நாம் இன்று எல்லோரும் ஒன்றாக இருக்கிறோம். தமிழ் இனத்தையும், அதன் மாண்பையும், இந்த மொழியையும், தமிழ்நாட்டையும் பாதுகாத்து, நம் உரிமைகளை கொண்டாடக்கூடிய ஒரு முதலமைச்சர் வேண்டும் என்பதற்காகதான் இந்த முதலமைச்சர் இன்னும் வாழ வேண்டும், வளர வேண்டும் என்று துக்கிப்பிடிக்கிறோம்.
சமூகத்தின் உரிமைகளையும், அடையாளங்களையும், மொழியுனுடைய கலாச்சார பிரிவுகளையும் பாதுகாக்க என்ன விலை கொடுத்தாலும் தயாராக இருக்கிறார் நம் முதலமைச்சர். 2ஜி வழக்கில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி என்று போட்டார்கள். எனன ஆனது. மன்மோகன் சிங் ஆட்சியை நிலைகுலைய செய்வதற்கான ஆயுதமாக அது பயன்படுத்தப்பட்டது. 10 மாதங்களுக்கு முன்பு ஆற்று மணலில், மண் அள்ளினார்கள் என்று சிபிஐ வந்து அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தினார்கள். என்ன செய்தது?. என்ன வழக்கு?
இன்று நீங்கள் பயம் காட்டுகிறீர்கள். ஆனால் ஒன்றும் மட்டும் நான் சொல்வோன். அப்படிப்பட்ட வழக்குகளுக்கு எல்லாம் பயந்து அடிபணியும் தலைமை திமுக-வும் அல்ல, தளபதி ஸ்டாலினும் அல்ல. ஒரு வழக்கை போட்டு 3 முறை சோதனை நடத்தினால் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் கலகலத்துவிடும் என்று நினைத்தீர்கள் என்றால், இந்த கூட்டணி இன்னும் ஒற்றுமையாகும். இன்னும் வலுப்படும். ஒவ்வொரு வழக்கு போட்ட பிறகும் விஸ்வருபம் எடுக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நாக்பூரின் நாசகார அரசியலுக்கு நானும், என் சமூகமும் அடிபணிய மாட்டோம் என தளபதி ஸ்டாலின் கூறியுள்ளார். அவர் மூலமாக தமிழ்நாட்டுக்கு விடியல் தேடுவோம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.