ARTICLE AD BOX
இந்திய சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக பான் இந்தியப் படங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. அதில் சில படங்கள் மெகா வெற்றியைப் பதிவு செய்தாலும், சில படங்கள் தோல்வியைத் தழுவுகின்றன. ஆனால் ஒரே படத்தின் இரண்டு பாகங்களின் மூலம் மிக விரைவிலேயே பான் இந்திய ஸ்டாராக உருவெடுத்துள்ளார் கன்னட சினிமாவின் யாஷ். தென்னிந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராகவும் இவர் மாறியுள்ளார். இவருக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தவர் ஒரு தமிழ் நடிகர் என சமீபத்தில் கூறினார்.
கேஜிஎஃப் படத்தின் மூலம் பான் இந்திய அளவில் பிரபலமானவர் கன்னட நடிகர் யாஷ். இந்தப் படத்தில் ராக்கி பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நிஜத்திலும் பலரும் இவரை ராக்கி பாய் என்று அழைக்கும் அளவிற்கு பிரபலமாகி விட்டார். இந்தப் படம் இவரை ரசிகர்கள் மத்தியில் ஒரு மாஸ் நடிகராக காட்டி விட்டது என்றே சொல்லலாம்.
கன்னட சினிமாவில் மிகவும் வெற்றிகரமான கதாநாயகனாக உருவெடுத்திருக்கும் யாஷின், நிஜப் பெயர் நவீன் குமார் கவுடா. தொடக்க காலத்தில் யாஷ் சில தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தார். 2008 இல் மோகினி மனசு என்ற படத்தின் மூலம் வெள்ளித் திரை வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதன்பிறகு பல வெற்றிப் படங்களைக் கொடுத்து தன்னை சினிமாவில் நிலைநிறுத்திக் கொண்டார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த கேஜிஎஃப்-1 இவரது சினிமா பயணத்தையே புரட்டிப் போட்டது. கன்னட நடிகராக வலம் வந்தவர் இந்தப் படத்தின் மூலம் பான் இந்திய நடிகராக உருவெடுத்தார். இப்படத்தின் இரண்டாம் பாகம், 2022 இல் வெளிவந்து ரூ.1,000 கோடி வசூலைக் கடந்தது. இனி இவரது படங்கள் அனைத்துமே பான் இந்திய அளவில் தான் வெளிவரும் என்பது நிதர்சனம்.
வெற்றிகரமான பான் இந்திய நடிகருக்கு தமிழ் நடிகர் தான் இன்ஸ்பிரேஷன் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மை இதுதான். கோலிவுட்டின் இளைய தளபதி விஜய் தான், நடிகர் யாஷ்க்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தவர். விஜய்யின் நடனத்தைப் பற்றி சமீபத்தில் புகழ்ந்த யாஷ், “இந்த வயதிலும் விஜய்யின் நடனம் அட்டகாசமாக இருக்கிறது. டான்ஸில் அவரை முந்த ஆளே கிடையாது. நான் அதிகமுறை விஜய்யைப் போல் ஆட முயற்சி செய்திருக்கிறேன். ஆனால் என்னால் அவர் அளவிற்கு டான்ஸ் ஆட முடியவில்லை. தளபதியின் டான்ஸைப் பார்த்து பலமுறை நான் பிரமித்துப் போயிருக்கேன்” என்று கூறினார்.
விஜய் நடிப்பில் பீஸ்ட் மற்றும் யாஷ் நடிப்பில் கேஜிஎஃப்-2 ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் திரைக்கு வந்தன. வணிக அளவில் பீஸ்ட் திரைப்படம் வெற்றியைப் பெற்றாலும், விமர்சன ரீதியாக தோல்வியடைந்தது. இருப்பினும் இப்படத்திலும் விஜய்யின் டான்ஸ் அல்டிமேட்டாக இருந்தது. அதே நேரம் கேஜிஎஃப்-2 ரூ.1,000 கோடிக்கும் மேல் வசூலை வாரிக் குவித்தது. நடிகர் யாஷ் தற்போது டாக்ஸிக் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதோடு இராமாயணம் படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.