ARTICLE AD BOX
தேசிய, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சித் துறைக்குச் சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து கட்சி கொடி கம்பங்களையும் 12 வாரங்களில் அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த ஜனவரி 27-ம் தேதி உத்தரவிட்டது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வும் பழைய தீர்ப்பை கடந்த 6-ம் தேதி உறுதி செய்தது.
இதையடுத்து அறிக்கை வெளியிட்ட தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன், பொது இடங்களில் உள்ள திமுக கொடிக் கம்பங்களை மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளைக்கழக நிர்வாகிகள் அகற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்நிலையில் துரைமுருகனின் செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் விமர்சித்து உள்ளார்.
இதுகுறித்து தேனி கூட்டத்தில் பெ.சண்முகம் கூறியபோது, "துரைமுருகனின் இந்த அறிவிப்பு, எங்களை போன்றவர்களை இக்கட்டான நிலைக்கு தள்ளி இருக்கிறது. குறைந்தபட்சம், அரசியல் கட்சிகளுக்கு எதிரான இந்த தீர்ப்பு குறித்து, மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கலாம். இல்லை தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளை அழைத்து, அந்த தீர்ப்பு குறித்து கலந்தாலோசித்திருக்கலாம் என்றார்.
எந்த அணுகுமுறையும் மேற்கொள்ளாமல், 'நாங்கள் தன்னிச்சையாக அகற்றிக்கொள்கிறோம்' என கூறியுள்ளனர். இது தி.மு.க.-வின் சொந்த பிரச்சனை அல்ல. அரசியல் கட்சி, கொடி என அனைத்தும் சட்டத்தில் இருக்கக்கூடிய விஷயம். போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என கூறினால் சரியாக இருக்கும்" என்று தெரிவித்தார். மேலும் தி.மு.க. தனது முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் எனவும் சண்முகம் கேட்டுக்கொண்டார்.
நீதிமன்றங்களுக்கு இவ்வளவு வெறுப்பு ஏன்?
நீதிமன்றங்களுக்கு அரசியல் கட்சிகள் மீது இவ்வளவு வெறுப்பு ஏன் என்று தெரியவில்லை. சமீபகாலமாக நீதிபதிகள் எல்லை மீறுகின்றனர். அதன் தொடர்ச்சி தான், அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு சம்பந்தப்பட்ட கட்சியினர் கட்டணம் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் உத்தரவிட்டுள்ளார்.
காவல்துறையிடம் அனுமதி கேட்டால் தானே, கட்டணம் செலுத்த வேண்டும். இனி அனுமதி கேட்க மாட்டோம், ஏனென்றால் எங்களின் செந்தொண்டர் படை போதும் பாதுகாப்பிற்கு. அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டம், கருத்தரங்கு, மாநாடு போன்ற நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் உரிமை. ஆனால் அதை மீறும் வகையில் உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு இருக்கிறது,’’ என்று சண்முகம் பேசினார்.