ARTICLE AD BOX
உலகம் இன்று காலநிலை மாற்றத்தின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. புவி வெப்பமயமாதல், தீவிர வானிலை மாற்றங்கள் எனப் பல பிரச்னைகள் நம் கண் முன்னே தினம் தினம் அரங்கேறி வருகின்றன. இதற்கெல்லாம் முக்கிய காரணம் மனிதனின் செயல்பாடுகள்தான் என்றாலும், இந்த பாதிப்புகளில் பெரும் பங்கை வகிப்பது யார் தெரியுமா? வெறும் சில நிறுவனங்கள்தான்.
சமீபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சிகரமான உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளது. உலகளவில் வெளியேற்றப்படும் கார்பனில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை வெறும் 36 நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் புதைபடிவ எரிபொருட்களில் இருந்துதான் வருகிறது என்கிறது அந்த ஆய்வு. சவுதி அரம்கோ, கோல் இந்தியா, எக்ஸான்மொபில், ஷெல் போன்ற பெரிய நிறுவனங்களும் இதில் அடக்கம். இன்னும் சில சீன நிறுவனங்களும் இந்தப் பட்டியலில் உள்ளன. இவர்கள் ஒரு வருடத்தில் வெளியிடும் கார்பனின் அளவு மட்டும் 20 பில்லியன் டன்களை தாண்டும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
நாடுகளின் கார்பன் வெளியீட்டை ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த நிறுவனங்களின் பங்கு எவ்வளவு பெரியது என்பது புரியும். உதாரணமாக, சவுதி அரம்கோ ஒரு நாடாக இருந்தால், உலகின் நான்காவது பெரிய மாசுபடுத்தும் நாடாக அது இருக்கும். சீனா, அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்தபடியாக அதிக கார்பன் வெளியிடும் நாடு இதுதான். ஜெர்மனியை எடுத்துக்கொண்டால், உலகின் ஒன்பதாவது பெரிய மாசுபடுத்தும் நாடு அது. ஆனால், எக்ஸான்மொபில் நிறுவனம் வெளியிடும் கார்பன் அளவும் ஜெர்மனியின் கார்பன் வெளியீடும் ஏறக்குறைய சமம் என்கிறார்கள். தனி ஒரு நிறுவனத்தின் கார்பன் வெளியீடு, ஒரு நாட்டிற்கு சமமாக இருப்பது எவ்வளவு பயங்கரமானது!
உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த பல நாடுகள் இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகின்றன. ஆனால், இந்த நிறுவனங்களின் செயல்பாடு அந்த இலக்குகளுக்கு முற்றிலும் எதிராக உள்ளது. வெப்பநிலையை 1.5°Cக்குள் கட்டுப்படுத்த வேண்டுமென்றால், 2030க்குள் கார்பன் வெளியீட்டை 45% குறைக்க வேண்டும். ஆனால், உண்மை நிலை என்னவென்றால் கார்பன் வெளியீடு குறைந்தபாடில்லை, இன்னும் அதிகமாகிக் கொண்டுதான் போகிறது. இதனால் புவியின் வெப்பம் அதிகரித்து, தீவிர வானிலை மாற்றங்கள் தொடர்கின்றன. நிலைமை இப்படியே போனால், 2050க்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை எட்டுவது என்பது வெறும் கனவாகத்தான் இருக்கும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல வாக்குறுதிகளை கொடுத்தாலும், உலகின் மிகப்பெரிய புதைபடிவ எரிபொருள் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியையும், கார்பன் வெளியீட்டையும் தொடர்ந்து அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. கார்பன் மேஜர்ஸ் தரவுத்தளம் சொல்வது என்னவென்றால், இந்த நிறுவனங்கள் 2023 ஆம் ஆண்டிலும் தங்கள் கார்பன் வெளியீட்டை அதிகரித்துள்ளனவாம். அதுவும், 2023 தான் வரலாற்றிலேயே வெப்பமான ஆண்டாக பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.