ARTICLE AD BOX
சர்ச்சைக்குரிய கார்ட்டூனை நீதிமன்ற உத்தரவுப்படி தன்னுடைய தளத்திலிருந்து நீக்கி விகடன் ஊடகம் அறிவிப்பும் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட சட்டவிரோத இந்தியக் குடியேறிகள் தொடர்பாக விகடன் மின்னிதழில் ஒரு கார்ட்டூன் வெளியிடப்பட்டது. ஆனால் அதை முன்னிட்டு முன்னறிவிப்பின்றி விகடன் தளத்தை மைய அரசின் மின்னணு- தகவல்நுட்பத் துறை அமைச்சகம் முடக்கிவைத்தது.
இது தொடர்பாக நாடு முழுவதும் ஊடக உரிமை தொடர்பான அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழகத்திலும் பல ஊர்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் இன்று அளித்த உத்தரவில், அந்தக் கார்ட்டூனை நீக்கும்படி விகடன் தளத்துக்கும் முடக்கத்தை நீக்கும்படி மைய அரசுக்கும் கூறியிருந்தது. அதன்படி விகடன் நிருவாகம் அந்தக் கார்ட்டூனை நீக்கியுள்ளது.
விகடன் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், “ 16.02.2025 விகடன் பிளஸ் இதழின் (10.02.2025 அன்று வெளியான) அட்டையாக வெளியான கார்ட்டூன், WP 7944 of 2025 என்ற வழக்கில் 06-03-2025 அன்று மாண்பமை சென்னை உயர் நீதிமன்றம் தந்த உத்தரவின்படி நீக்கப்படுகிறது.
இந்த விவகாரத்தில், குறிப்பிட்ட அந்த கார்ட்டூன் அரசியல் சாசனத்தின் பிரிவு 19(1)(a) வழங்கும் உரிமையான கருத்துச் சுதந்திரத்தின்படி பாதுகாக்கப்பட்ட ஒன்றா, அல்லது மத்திய அரசின் ஐடி சட்டத்தின் பிரிவு 69A-ன் படி தடை செய்யப்படக்கூடிய ஒன்றா என்பது குறித்த வழக்கு தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் பரிசீலனையின் கீழ் உள்ளது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.