ARTICLE AD BOX
தமிழ்நாட்டில் உள்ள சுவடிகளை மட்டுமில்லாமல், உலக நாடுகளில் உள்ள தமிழ்ச் சுவடிகளையும் கண்டு மின் பதிப்பாக்கம் செய்ய உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் இதுதொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
”தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழக அரசின் 2025 – 2026 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் அறிவித்திருக்கிறார். மக்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களையும் அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் அறிவித்திருப்பதை வரவேற்றுப் பாராட்டுகிறேன்.
தமிழ்மொழி வளர்ச்சி, தமிழர் வரலாற்றின் தொன்மையை உலகறியச் செய்யும் திட்டங்கள், ஐ.நா. பேரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 193 உலக நாடுகளின் அலுவல் மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்ப்புத் திட்டம், 500 தமிழ் இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடும் திட்டம், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் தொழில்நுட்ப நூல்களைத் தமிழ்மொழியில் வெளியிடும் திட்டம், தமிழ்நாடெங்கும் அரசு நடத்தும் புத்தகக் கண்காட்சிகளை இந்தியாவின் பிற மாநில முக்கிய நகரங்களிலும், வெளிநாடுகளிலும் நடத்தும் திட்டம், வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் இளைய தலைமுறையினருக்குத் தமிழ் மரபு, தமிழ்மொழி மற்றும் தமிழ்க் கலைகள் ஆகியவற்றைப் பயிற்றுவிக்க 100 தமிழாசிரியர்கள் மற்றும் கலைஞர்களை அந்நாடுகளுக்கு அனுப்பி நேரடியாக வகுப்புகள் நடத்திடும் திட்டம், தமிழ்ச் செம்மொழியின் பெருமையினையும், தமிழ்ப் பண்பாட்டின் சிறப்பினையும் உலகத் தமிழ் இளைஞர்களிடையே பரப்பிட செய்யும் நோக்கத்தில் அவர்களுக்குக் கணினி வழி தேர்வு முறையில் உலகத் தமிழ்ப் போட்டி திட்டம், தமிழ்மொழியின் தொன்மையினை இளைய தலைமுறையினருக்கு உணர்த்தும் வகையில் அகரம் மொழிகளின் அருங்காட்சியகம் அமைக்கும் திட்டம், தமிழ்நாட்டில் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளை விரிவாக பல்வேறு மாவட்டங்களில் மேற்கொள்ளும் திட்டம், அகழ்வாராய்ச்சியில் வெளிக்கொணரப்பட்ட தொல்லியல் பொருட்களை ஆய்வதற்கு உலகப்புகழ் பெற்ற ஆய்வு நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளும் திட்டம், காவிரிபூம்பட்டினம் முதல் நாகப்பட்டினம் வரை ஆழ்கடல் அகழாய்வினை மேற்கொள்ளும் திட்டம், தமிழ்நாடெங்கும் மேற்கொள்ளப்படும் அகழ்வாராய்ச்சிகளில் வெளிக்கொணரப்பட்ட தொல்லியல் பொருட்களைக் காட்சிப்படுத்தும் வகையில் அருங்காட்சியகங்களை அமைக்கும் திட்டம், சிந்துவெளி பண்பாட்டுக் கண்டுபிடிப்பின் நூற்றாண்டின் நிறைவையொட்டி சென்னை அருங்காட்சியகத்தில் சிந்துவெளிப் பண்பாட்டு அரங்கம் அமைக்கும் திட்டம், சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள 2000த்திற்கும் மேற்பட்ட செப்புச் சிலைகளை அனைவரும் கண்டு மகிழும் வகையில் காட்சிப்படுத்த புதிய கட்டடம் ஆகியவற்றை உருவாக்கும் திட்டங்களைத் தமிழக அரசு மேற்கொள்வதை உளமாறப் பாராட்ட தமிழர்கள் அனைவரும் கடமைப்பட்டுள்ளனர்.
பழந்தமிழ் ஓலைச்சுவடிகள், அரிய ஆவணங்கள் ஆகியவற்றை மின் பதிப்பாக்கம் செய்திடும் திட்டத்தை நிதியமைச்சர் அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். தமிழ்நாட்டில் உள்ள பழந்தமிழ் ஓலைச்சுவடிகள் அரிய ஆவணங்களை மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலும் அமைக்கப்பட்டுள்ள அரசு அருங்காட்சியகங்களிலும், அந்நாடுகளின் தேசிய நூலகங்களிலும் பல்லாயிரக்கணக்கான பழம் ஓலைச்சுவடிகள் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
மேலும் இந்நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள், கிருத்தவ பாதிரிகள் ஆகியோர் இங்கிருந்து கொண்டு சென்ற பழம் ஓலைச்சுவடிகளும், ஆவணங்களும் இந்நாடுகளில் உள்ள தனியார் அருங்காட்சியகங்களிலும் ஏராளமாக உள்ளன. இவற்றின் காலம் 300 அல்லது 400 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்காது. எனவே, இவற்றையெல்லாம் உடனடியாக மின் பதிப்பாக்கம் செய்து தமிழ்நாட்டிற்குக் கொண்டுவந்து சேமித்து வைக்கவேண்டும். தமிழக ஆய்வாளர்கள் இவற்றை ஆய்வு செய்வதற்கு உதவ வேண்டும். இதன்மூலம் இதுவரை கிடைக்காத பழந்தமிழ் நூல்கள் கிடைக்கக் கூடிய வாய்ப்பு உருவாகும். எனவே, பழந்தமிழ் சுவடிகள், ஆவணங்கள் ஆகியவற்றை மின் பதிப்பாக்கம் செய்யும் திட்டத்தை உலக நாடுகளுக்கும் விரிவாக்க வேண்டும்.” என நிதியமைச்சரையும் முதலமைச்சரையும் நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.