ARTICLE AD BOX
ஒரு கோடைக்கால ஞாயிற்றுக்கிழமை. காஞ்சிபுரம் ஸ்ரீ மடத்தில் பல்லக்கில் அமர்ந்து தரிசனம் தந்து கொண்டிருந்தார் மகாபெரியவர். ஏராளமான பக்தர்கள் மகா பெரியவரை தரிசிக்க வந்திருந்தார்கள். தட்டு தட்டாகப் பழங்கள், கல்கண்டு, தேன் பாட்டில்கள் என விதவிதமான பண்டங்கள் அங்கே சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
அப்போது திடீரென்று எங்கிருந்தோ ஒரு குரங்குப் படை அங்கே வந்தது. வந்ததுமே ஒரே அட்டகாசம்தான்! பழங்களை குதறித்தின்றன. தேன் பாட்டில்கள் நாலா பக்கமும் உருண்டன.
‘அடுத்ததாக, பெரியவாளிடமும் போய் இந்தக் குரங்குகள் ஏதோ விஷமம் செய்யப்போகின்றனவோ?’ என்று சிஷ்யர்கள் தவியாய்த் தவித்திருந்தனர்.
ஆனால், மகாபெரியவர் முகத்தில் எந்த சஞ்சல ரேகையும் தென்படவில்லை. மாறாக, “அவற்றை ஒன்று செய்யாதீர்கள்!” என்று கட்டளையிட்டார்.
ஈஸ்வராக்ஞை! தடிகளைக் கொண்டு வந்த அன்பர்கள், செயலிழந்து சிலைகளாவே அங்கு நின்று விட்டார்கள்.
ஒருவழியாக தம் வந்த வேலை நல்லபடியாக முடிந்துவிட்ட சந்தோஷத்தில் அத்தனை குரங்குகளும் திடீரென்று அங்கிருந்து போய்விட்டன.
அங்கே அப்போது, பக்தர்களுக்கு ஒரு கதை சொன்னார் மகாபெரியவர். “தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் குரங்குகளின் தொல்லை தாங்க முடியவில்லை. ஒரு நாள் வழக்கம்போல் அட்டகாசம் செய்ய வந்த அந்த குரங்குக் கூட்டத்தில் ஒரு குரங்கு மட்டும் அசட்டுத்தனமாக மாட்டிக் கொண்டுவிட்டது. அந்தக் குரங்கை ஒருவர் தடியால் நன்கு அடித்துவிட்டார். உள்காயத் தோடு அங்கிருந்து ஓடிவிட்ட அந்தக் குரங்கு, சில நாட்களுக்குப் பிறகு இறந்துவிட்டது.
அடுத்து வந்த சில மாதங்களில் குரங்கை அடித்த அந்த அன்பருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்குப் பேச்சு வரவில்லை. திருமண வயதாகியும் அந்தப் பெண் குழந்தைக்கு சரியாகப் பேச்சு வராததால் பெற்றோருக்கு மிகுந்த மனவருத்தம்.
அப்போது ஒரு நாள் அவர்கள் என்னிடம் வந்து தங்களது மகள் விஷயத்தையும் தாம் செய்த பாவத்தையும் கூறி அழுது வருத்தப்பட்டார்கள்.
நான் அவர்களிடம், மண்ணால் ஒரு குரங்கு பொம்மை செய்து, அதை அவர்களது கிராம தேவதை கோயிலில் காணிக்கை மாதிரி சமர்ப்பித்துவிடும்படி கூறினேன். அதோடு, மனமொப்பி அந்தப் பெண்ணை கல்யாணம் செய்துகொள்பவனாக ஒரு மாப்பிள்ளை பார்த்து, திருமணம் செய்து கொடுக்கும்படி கூறினேன். அவர்களும் அப்படியே செய்தார்கள். வாய் பேச முடியாத அந்தப் பெண்ணுக்கு சுட்டித்தனமாக பேசுகின்ற ஒரு அழகான குழந்தை பிறந்ததாக அடுத்து வந்த நாட்களில் அவர்கள் என்னிடம் வந்து கூறினார்கள்.
அதனால் குரங்குகளை எப்போதும் அடிக்கக் கூடாது. அவற்றிடம் கருணை காட்ட வேண்டும். அவை ராம சேவகர்கள் பரம்பரையில் தோன்றியவை. நமக்குத் தொந்தரவு கொடுத்தாலும் அனுமனை நினைத்துக்கொண்டு அவற்றை அடிக்காமல் விட்டு விடவேண்டும்!” என்று கூறி முடித்தார் மகாபெரியவர்.
அந்த உபதேசத்தைக் கேட்ட அன்பர்கள் மிகவும் மனம் உருகிப்போனார்கள்.
- பொன். பாலாஜி