ARTICLE AD BOX
இந்தியா என்றாலே 'பண்பாடு', 'கலாச்சாரம்' என்று கூறலாம். இந்தியா அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும், செழிப்பு மிக்கதாகவும் விளங்கியது. இந்தியா அறிவு முதிர்ச்சியாக அறிவியல் துறையிலும், ஆன்மீக முதிர்ச்சியாக வாழ்வியலிலும் முன்னோடியாகத் திகழ்ந்தது. இதனை இப்பொழுது பதிவிடும்பொழுது கடந்த காலமாக பதிவிடுவது மனவேதனையை தருகின்றது. இதற்கு முழுமுதற் காரணம்; மேற்கத்திய கலாச்சார வாழ்க்கை முறை மற்றும் ஆடம்பர பகட்டு வாழ்விற்கு நாம் அடிமையாகிவிட்டதே ஆகும்.
ஒரு சொர்க்கம் பூமியில் இருக்குமே என்றால் அது நம் இந்திய நாடு. உயிர்ப்பு பூமி என்று கூறலாம். அப்படி என்றால் இந்திய மண்ணின் மகத்துவத்தை நாம் அனைவரும் புரிந்துகொண்டு போற்ற வேண்டும்.
'ஒரு பண்பாடு இல்லை என்றால் பாரதம் இல்லை
நாம் பண்போடு வாழ்ந்திருந்தால் பாவமும் இல்லை
சிறகில்லாமல் தள்ளாடும் செல்லக்கிளிகள்
என் கண்ணோரம் இப்போது கண்ணீர் துளிகள்' என்ற நிலைக்கு வந்துவிட்டோம்.
இதற்கு முழுமுதற் காரணம் நாம் மேற்கத்திய கலாச்சாரத்தை போற்றி கொண்டாட ஆரம்பித்ததே. ஏனைய நாடுகள்; நம் செல்வ செழிப்பினை பார்த்தும்; விசால அறிவினை உணர்ந்தும்; சூது கவ்வுவதுபோல் கவ்விக்கொண்டு, அனைத்தையுமே அழித்துவிட்டு 'தான்' என்ற அகங்காரத்தை நிலை நாட்டுவதற்காக அடிமைகளாக வாழ பழகிவிட்டு அதில் வெற்றியும் கண்டுவிட்டனர்.
வெகுளித்தன்மையிலும், எளிமையிலும்தான் உயிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கின்றது என்பதை நாம் அனைவரும் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். ஒருவன் தனது வாழ்வு சிறப்பு மிக்கதாகவும், செழிப்பு மிக்கதாகவும் அமைய வேண்டும் என்றால் அவன் அறம் சார்ந்து அன்பு நெறியில் நின்று எளிமையாகவும், உள்ளன்போடும், பண்போடும், அகத்திலும் புறத்திலும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.
தனிமனித மாற்றம் மட்டுமே சமுதாய மாற்றமாக அமைய முடியும். ஆகவே, கடல் கடந்து வாழும் வெளிநாட்டினரை பார்த்து ஏங்கியும், வாடியும், தனது இருப்பிடமாகிய சொர்க்கத்தை விடுத்து அகலக்கால் வைத்து பிறரைப் போல் செல்வ வளத்தில் தானும் வளரவேண்டும் என்று ஓடுவதை விடுத்து, தனக்குக் கொடுக்கப்பட்டதை நிறைந்து, நிதானித்து நம் முன்னோர்கள் காட்டிய வழிகாட்டுதலின் படி ஒருவர் வாழ்வோமேயானால் அதுவே நாம் வாழும் ஒவ்வொரு நாளும் 'சொர்க்கம்" ஆகும்.
சமூக முன்னேற்றம் வெறும் தொழில்நுட்ப முன்னேற்றம் அல்ல. சமூக முன்னேற்றம் ‘நெறிமுறை நடத்தைக்கொண்டு பாரபட்சம் இன்றி உள் அன்போடு வாழும் அறம் சார்ந்த வாழ்க்கையை குறிக்கும்.’
ஒழுக்கம் நம் ஒவ்வொரு சொல்லிலும், செயலிலும், நடத்தையிலும் இருக்கவேண்டும்.
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை
என்று திருவள்ளுவர் கூறுகின்றார்.
இதன் பொருள், ஒழுக்கத்தை வருந்தியும் போற்றி காக்கவேண்டும். பலவற்றையும் ஆராய்ந்து போற்றி தெளிந்தாலும் அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.
இதனை நாம் உணராமல் மேற்கத்தியர்களைப் போன்று நாமும் சுவைக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்த கலாச்சார கட்டுப்பாட்டினை விடுத்து ஓடுவது அறியாமையின் உச்சம்.
கலாச்சாரத்தில் நாம் மேம்பட்டு செழித்து விளங்கி மேற்கத்தியர்கள் நம்மை உயர்ந்து பார்த்து ஊக்கம் அடைவதற்கு முரணாக, நாம் தாழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பது துரதிஷ்டமாகும்.