ARTICLE AD BOX
உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில், எல்லைப் பகுதிகளில் சாலைகள் அமைக்கும் ராணுவப் பிரிவைச் சேர்ந்த 57 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்ட நிலையில், அவர்களில் 33 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மற்ற 24 பேரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சாமோலி மாவட்டத்திலுள்ள மனா கிராமத்திற்கும் - பத்திரிநாத்திற்கும் இடையேயான சாலையிலுள்ள பனியை, எல்லை சாலை பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட பனிச்சரிவில், எல்லைச் சாலைகள் அமைப்பு (BRO) எனும் ராணுவப் பிரிவைச் சேர்ந்த 57 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.
இதனையடுத்து, பனிப்பொழிவு மற்றும் மழைக்கிடையே நடைபெற்ற மீட்பு பணியில், இதுவரை 33 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இரவு நேர பனிப்பொழிவு காரணமாக, மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம்:
பிப்ரவரி 27 அன்று 2,400 மீட்டருக்கு மேல் உள்ள இடங்களில் பனிச்சரிவு எச்சரிக்கையை சண்டிகரில் உள்ள பாதுகாப்பு புவி தகவல் ஆராய்ச்சி நிறுவனம் (DGRE) வெளியிட்டது. சாமோலி, உத்தரகாசி, ருத்ரபிரயாக், பித்தோராகர் மற்றும் பாகேஷ்வர் மாவட்டங்களில் 2,400 மீட்டருக்கு மேல் உள்ள இடங்களுக்கு 24 மணி நேர பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மனா மற்றும் மனா கணவாய்க்கு இடையில் ஏற்பட்ட பனிச்சரிவில் இவர்கள் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பிரதமர் அலுவலகம், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களின் அலுவலகங்கள், அங்கு நிலவும் சூழல் குறித்து தொடர்ந்து கேட்டறிந்து வருவதாக தெரிவித்துள்ளார்.