ARTICLE AD BOX
தற்போது உள்ள காலக்கட்டத்தில் பிரைட் ரைஸ், நூடுல்ஸ் போன்ற உணவு வகைகளை பெரியவர் முதல் சிறியவர் வரை அதிகமாக விரும்பி உண்பது வழக்கத்தில் உள்ளது. இத்துடன் சேர்த்து சாப்பிட தக்காளி சாஸ், சில்லி சாஸ் போன்ற சாஸ் வகைகளை அதிகம் உபயோகப்படுத்துகிறோம். உணவில் சேர்த்து சாப்பிடும் சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி சாஸ் போன்ற சாஸ் வகைகள் உடலுக்கு ஆரோக்கியமானதா? அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
சோயா விதைகளுடன் கோதுமையை சேர்த்து அதை Fermentation செய்வதற்காக ஈஸ்ட் வகைகளை சேர்த்து அதிலிருந்து கிடைக்கக் கூடியதைத்தான் சோயா சாஸ் என்கிறோம். சோயாவில் இருக்கும் புரதம் இதில் கிடையாது. அதற்கு பதில் அதிகப்படியான உப்பு இருக்கிறது.
சோயா சாஸ் 1 தேக்கரண்டியில் 1000 மில்லி கிராம் சோடியம் உள்ளது. ஒரு நாளைக்கு 5 கிராம் மட்டுமே உப்பு சேர்க்க வேண்டும். அதில் சோடியம் 2.5 கிராம் சேர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இரத்த அழுத்தம், சிறுநீரகப் பிரச்னை, இருதய செயலிழப்பு உள்ளவர்கள் உப்பை குறைவாக பயன்படுத்துவது நல்லது. இவர்கள் இதுபோன்ற சோயா சாஸை அதிகமாக எடுத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
தக்காளி சாஸில் தக்காளி, உப்பு, வினிகர், சர்க்கரை போன்றவை இருக்கிறது. தக்காளி சாஸ் 15 கிராமில் 15 முதல் 20 கலோரிகள் இருக்கிறது. தக்காளியில் இருந்து வரக்கூடிய கலோரிகளை விட சர்க்கரையில் இருந்து வரக்கூடிய கலோரிகள் அதிகம். 1 தேக்கரண்டி தக்காளி சாஸில் 4 கிராம் சர்க்கரை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, குழந்தைகளுக்கு தக்காளி சாஸ் கொடுக்கும்போது அளவாகக் கொடுப்பது நல்லதாகும்.
சில்லி சாஸ் மிளகாயிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் சோயா சாஸில் உள்ளது போல அதிக உப்பு கிடையாது. தக்காளி சாஸில் இருப்பதுபோல அதிக சர்க்கரையும் கிடையாது. எனவே, இது காரத்திற்கு மிளகாய் சேர்த்துக்கொள்வது போலத்தான்.
அதிக வயிறு எரிச்சல், வயிற்றில் புண் இருப்பவர்கள் இதை தவிர்ப்பது அவசியம். மற்ற இரண்டு சாஸ்களுடன் ஒப்பிடுகையில் சில்லி சாஸ் ஓரளவிற்கு பரவாயில்லை என்றே சொல்ல வேண்டும்.
எனவே, அடுத்தமுறை சாஸ்களை உணவில் பயன்படுத்தும்போதும் வெளியிலே உணவுகள் வாங்கி சாப்பிடும்போதும் எந்த அளவிற்கு இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் கட்டுப்பாட்டுடன் இருப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு உதவும்.