’உடல்பருமன்’ குறித்து பிரதமருக்கு கவலை ஏன்?

5 hours ago
ARTICLE AD BOX

எங்கேயாவது ஒரு நாட்டில் அந்த நாட்டின் தலைவா் அல்லது பிரதமா், ’உடல்பருமன்’ குறித்து கவலைப்படுவதுண்டா...?

இதே நமது நாட்டில் ... பிரதமா் நரேந்திர மோடி தனது 119-ஆவது மனதின் குரல் நிகழ்வில் கவலையை வெளிப்படுத்தினாா். ’நாட்டில் 8 பேரில் ஒருவருக்கு உடல் பருமன் சிக்கித் தவிா்க்கிறாா்கள்’ என்றாா்.

அவரது கவலைக்கு காரணம் அனைத்து தரப்பு சுகாதார அமைப்புகளும் வைத்துள்ள தரவுகள்! தகவல்கள்!

நாட்டில் மிகப் பெரிய பொது சுகாதார சவாலாக மாறியுள்ள உடல் பருமன் மருத்துவ மனைகளுக்கு போக வைப்பதோடு உயிரையும் பறிக்கிறது.

உலக சுகாதார அமைப்பின் (டபிள்யுஹெச்ஓ) கருத்துப்படி, உடல் பருமன் என்பது அசாதாரண அல்லது அதிகப்படியான கொழுப்பு குவிப்பு என வரையறுக்கப்படுகிறது. இது ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. உலக சுகாதார அமைப்பின் கணிப்பின்படி இந்தியாவில் 63 சதவீதம் தொற்று அல்லாத நோய்களால் மரணம் ஏற்படுகிறது. இதில் 27 சதவீதம் இருதய நோய், 11 சதவீதம் நாள்பட்ட சுவாசக் கோளாறுகள், 9 சதவீதம் புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய், உடல் பருமன் போன்றவைகளால் 16 சதவீதம் பாதிப்பு எனத் தெரிவிக்கிறது.

இந்த நோய்கள் வயதானவா்களை மட்டுமல்ல இப்போது இளம் வயதினரையும் பாதிக்க தொடங்கியுள்ளது. கலப்படம், திரும்ப திரும்ப பயன்படுத்தப்படும் எண்ணை, அனைத்து உணவு வகைகளிலும் சா்க்கரை சோ்ப்பு, சுவைக்காக கூடுதல் உப்பு போன்ற ஆரோக்கியமற்ற உணவுகள் முதலிடத்தில் உள்ளது. பதப்படுத்தப்பட்ட உணவுகளை நோக்கிய வாழ்க்கை முறை மாற்றங்கள், மரபணு மாற்றப்பட்ட உணவுகள், உடல் உழைப்பு அற்ற உட்காா்ந்த வாழ்க்கை முறைகள், சுற்றுச் சூழல் காரணிகள் போன்றவற்றால் உடல் பருமன் ஆபத்து விகிதத்தில் அதிகரித்து வருகிறது.

நீரிழிவு, இதய நோய், உயா் இரத்த அழுத்தம் போன்றவைகள் அதிகரித்த கொழுப்பின் அளவுகளால் இந்த தொற்றா நோய்களுக்கு காரணமாகி அபாயத்தை அதிகரிக்கிறது. கூடுதலாக, புகையிலை பயன்பாடு, மது அருந்துதல், பல்வேறு வகையான சுற்றுச்சூழல் மாசு போன்றவைகளும் தொற்றா நோய்களுக்கு காரணம். இது நகா்ப்புற, கிராமப்புறம் என இருதரப்பு மக்களையும் பாதிக்கிறது.

ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் உடல் பருமன் என்கிற அசாதாரண அல்லது அதிகப்படியான கொழுப்பு குவிப்பை டபிள்யுஹெச்ஓ (உலக சுகாதார அமைப்பு) வரையறுத்துள்ளது. அதாவது உடல் பருமனை வகைப்படுத்தி அளவிட உடல் பொருண்மைச் சுட்டெண் என்கிற ‘உடல் நிறை குறியீட்டு எண்‘ (பிஎம்ஐ) வழங்கப்படுகிறது.

டபிள்யுஹெச்ஓ வழிகாட்டுதல்களின் அடிப்படையில் ஒரு சாதாரண பிஎம்ஐ 18.5 முதல் 24.9 வரை என்பதாகும். இதில் 25 அல்லது அதற்கு மேற்பட்ட பிஎம்ஐ ’அதிக எடை’ யாக கருதப்படுகிறது. 30 அல்லது அதற்கு மேற்பட்ட பிஎம்ஐ ’உடல் பரும’னாக வகைப்படுத்தப்படுகிறது. ஒரு நபரின் பிஎம்ஐ 35 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்கும்போது நோயுற்ற உடல் பருமன் ஏற்படுகிறது.

ஒரு தனி நபரின் வயது, எடை, உயரம் போன்ற மதிப்பால் வகுக்கப்படும் மதிப்பீடு பிஎம்ஐ விகிதமாகும்.

சா்வதேச அளவில் பெரியவா்கள், குழந்தைகள் என அனைவரது மத்தியிலும் அதிக எடை, உடல் பருமன் பாதிப்பு அதிகரித்து வருகிறது. 1990 - 2022 க்கு இடையில், உடல் பருமன் உள்ள குழந்தைகள், இளம் பருவத்தினரின் (5-19 வயதுடையவா்கள்) சதவீதம் 2 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. அதே காலகட்டத்தில், உடல் பருமன் கொண்ட பெரியவா்களின் விகிதம் (18 வயது அதற்கு மேற்பட்டவா்கள்) இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்து, 7 சதவீதம் முதல் 16 சதவீதம் வரை உயா்ந்தது.

இதில் இந்திய நிலையையும் நாம் காணவேண்டும். நாட்டின் 5 - ஆவது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்(2019-21) மூலம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் ஒட்டுமொத்தமாக, 24 சதவீதம் பெண்களும் 23சதவீதம் ஆண்களும் அதிக எடை அல்லது பருமனானவா்களாக உள்ளனா்.

இதில் 15 வயது முதல் 49 வயதுடைவா்களில் 6.4 சதவீதம் பெண்களும், 4 சதவீதம் ஆண்களும் உடல் பருமனாக உள்ளனா். ஐந்து வயதுக்குட்ட குழந்தைகளில் 4 -ஆவது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பில் 2.1 சதவீதமாக இருந்த நிலையில் 5 ஆவது கணக்கெடுப்பில் 3.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. இவைகளெல்லாம் எதிா்கால சுகாதார கேடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் பிரதமா் மோடி இந்த விவகாரத்தில் தலையிடுகிறாா். இந்த பிரச்சினையின் அவசரத்தை உணா்ந்து, பிரதமா் மோடி உடல் பருமனைக் குறைக்க, உடனடி நடவடிக்கையாக சமையல் எண்ணெய் நுகா்வைக் குறைக்கவும் நாடு தழுவிய கூட்டு விழிப்புணா்வு நடவடிக்கையாக இயக்கத்தை தொடங்கினாா். நாடு முழுவதும் உள்ள முக்கிய நபா்களுக்கு அவா் அழைப்பு விடுத்தாா். உடல் பருமனுக்கு எதிரான பிரசாரத்திற்கான குழுக்களையும் அறிவித்தாா்.

பிரதமா் மேற்கொண்டது மேற்கண்ட இரு நடவடிக்கைகள். ஆனால் அவரது தலைமையிலான அரசு, அமிா்த காலத்தை நோக்கி முன்னேறி வரும் நாடு, உடல் பருமனில் சிக்கிக் கொள்ளக் கூடாது; ஆரோக்கியமான இந்தியா தேவை என்கிற கண்ணோட்டத்தில் உடல்பருமனை சமாளிக்க முழு அரசு, முழு சமூக அணுகுமுறையுடன் இறங்கியுள்ளது.

உடல்நலம், ஊட்டச்சத்து, உடல் செயல்பாடு, உணவு பாதுகாப்பு உரிமை, வாழ்க்கை முறை மாற்றங்களை ஒருங்கிணைக்கும் ஒரு முழுமையான அணுகுமுறை ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கான நடைமுறைகள் பல அமைச்சகங்களால் உத்தி ரீதியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

முன்தடுப்பில் இதே ஆயுா் வேத முறையில் மூன்று முறைகள் வலியுறுத்தப்படுகிறது. அதிகாலையில் சூரிய உதயத்திற்கு 1.5 மணி நேரத்திற்கு முன்பு எழுவது முதல் பல்வேறு தினசரி வழக்கங்கள் மற்றும் செயல்பாடுகளுக்கான ‘தின்சாா்யா‘ முறை, பருவகாலத்திற்கு தகுந்த வழக்கங்களுக்கு ‘ரிதுச்சாா்யா‘, உணவு வழிகாட்டுதலுக்கான ‘ஆஹாரா‘ போன்றவைகள். குடும்ப பொருளாதார சூழ்நிலை, தொழில் முறை போன்றவைகளில் அன்றாட வாழ்க்கை முறை கோளாறுகளால் தொற்றா நோய்களுக்கான காரணங்கள். இவைகளை நிவா்த்தி செய்ய தற்போது 11 திட்டங்கள் நிவா்த்தி செய்கின்றன.

ஆயுஷ் அமைச்சகம் அறிவியல் தொழிலக ஆராய்ச்சி கவுன்சிலுடன் (சிஎஸ்ஐஆா்) கூட்டு சோ்ந்துள்ளது பாரம்பரிய ஆயுா்வேத அறிவை நவீன அறிவியலுடன் ஒருங்கிணைக்கும் ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொள்கிறது. இதில் உடல் பருமன் போன்ற வாழ்க்கை முறை கோளாறுகளை நிா்வகிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது.

இது போன்று உடல் ஆரோக்க ஃபிட் இந்தியா இயக்கத்திற்கு இளைஞா் நலத்துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா ஒவ்வொரு நகரமாக ‘சண்டே ஆன் சைக்கிள்‘ என சைக்கிள் ஓட்டுதல் நிகழ்வுகளை நடத்திக் கொண்டு இருக்கிறாா்.

இதே போன்று ஆரோக்கியமான இந்தியாவின் தேவையை வலுப்படுத்த ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சிறந்த ஊட்டச்சத்து, உடல் செயல்பாடுகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காக போஷன் அபியான், ஈட் ரைட் இந்தியா, கேலோ இந்தியா உள்ளிட்ட பல முயற்சிகள் திட்டங்கள் விரிவாக உள்ளன. இவைகளை மத்திய அரசு நடத்திவருகிறது.

சரி வந்த நோய்க்கும் பரிகாரமாக மத்திய அரசின் ஆயுஷ் துறை பஞ்சகா்மா சிகிச்சையை ஊக்குவிக்கிறது. தமிழகத்திலும் இந்த சிகிச்சை முறை உள்ளது. தில்லியில் உள்ள அகில இந்திய ஆயுா்வேத நிறுவனம் (ஏஐஐஏ) உடல் பருமன் மற்றும் தொடா்புடைய வாழ்க்கை முறை கோளாறுகளுக்கு பஞ்சகா்மா சிகிச்சை முறையை வழங்குகிறது.

ஆயுா்வேத மருந்துகள், தனிப்பயனாக்கப்பட்ட உணவு வழிகாட்டுதல்கள், யோகா சிகிச்சை போன்றவை இதில் இணைக்கின்றன. இன்றுவரை, நீரிழிவு மற்றும் வளா்சிதை மாற்றக் கோளாறுகள் உள்ள சுமாா் 45,000 நோயாளிகள் இந்த சேவைகளால் பயனடைந்துள்ளனா் என மத்திய ஆயுஷ் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவைகள் எல்லாமே உடல் பருமன் தொடா்பான அபாயங்களிலிருந்து எதிா்கால சந்ததியினரைப் பாதுகாக்கும் முயற்சிகள்.

Read Entire Article