ARTICLE AD BOX
விலங்குகளின் முடியினைக் கொண்டு உருவாக்கப்படும் நெசவு இழையினை கம்பளி (Wool) என்கின்றனர். செம்மறி ஆடுகளிலிருந்தும், ஒட்டக வகையைச் சேர்ந்த விக்குன்யா, அற்பாக்கா ஆகியவற்றிலிருந்தும், முயல்களிலிருந்தும் அவற்றின் முடியினை வெட்டி கம்பளி நெசவு இழைகள் உருவாக்கப்படுகின்றன.
கம்பளியினால் செய்யப்பட்ட துணிகள் வெதுவெதுப்பாக இருப்பதால், இவை குளிர் நிறைந்த பகுதிகளில் பெரிதும் விரும்பிப் பயன்படுத்தப்படுகின்றன. கம்பளி உற்பத்திக்காகப் பல விலங்குகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றுள் மெரீனோ செம்மறி ஆடுகள் குறிப்பிடத்தக்கவைகளாக இருக்கின்றன.
மெரீனோ என்பது கம்பளிக்காக வளர்க்கப்படும் ஸ்பெயினைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற செம்மறி ஆட்டினமாகும். இந்த ஆடுகள் வெண்மையான முகமும், காதுகளும் கொண்டவையாகவும், கிடாக்கள் எனும் ஆண் ஆடுகள் கொம்புகளோடும், பெட்டை எனப்படும் பெண் ஆடுகள் கொம்புகள் இல்லாமலும் இருக்கும்.
இந்த ஆடுகளில் பெரும்பாலான ஆடுகளில் தலையும், கால்களும் ரோமத்தினால் மூடப்பட்டிருக்கும். வறண்ட மற்றும் மாறுபட்ட காலநிலைகளிலும் நன்கு வளரக்கூடிய திறன் கொண்டது. மற்ற இனங்களைக் காட்டிலும் இவ்வினப் பெண் ஆடுகள் அதிகக் காலம் வாழக்கூடியனவாகவும் இருக்கின்றன.
செம்மறி ஆடுகள் வகைகளில், மெரீனோ இனச் செம்மறி ஆடுகளின் முடியே மிகவும் மென்மையானது. இந்த மெரீனோ ஆடுகளின் முடியிலிருக்கும் சில தன்மைகளின் காரணமாக, தடகள விளையாட்டு ஆடைகளின் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த முடி கொண்டு தயாரிக்கப்பட்ட தடகள விளையாட்டு ஆடைகள் அனைவராலும் விரும்பிப் பயன்படுத்தப் படுகின்றது.
அதற்குக் கீழ்க்காணும் காரணங்கள் குறிப்பிட்டுச் சொல்லப்படுகின்றது.
* உடல் வெப்பநிலையைப் பராமரிக்கிறது. வெதுவெதுப்பாக இருந்தாலும், இவை அணிபவரின் உடல் வெப்பநிலையை மிகவும் அதிகரிப்பதில்லை.
* இவை வியர்வையை நன்கு உறிஞ்சிக் கொள்கின்றன.
* பருத்தியைப்போல ஈரத்தை உறிஞ்சிக் கொண்டாலும், ஈரமாக இருக்கையிலும் வெதுவெதுப்பாகவே இருக்கின்றது.
* மற்ற கம்பளி வகைகளைப் போலவே, மெரீனோ முடியைக் கொண்டு தயாரிக்கப்பெற்ற இழைகளிலும் பாக்டீரியாவை எதிர்க்கும் திறன் கொண்ட லெனோலின் உள்ளது.
* தற்போது கிடைக்கும் பல்வேறு கம்பளி வகைகளில் மெரீனோவின் கம்பளியே மிகவும் மென்மையானது.
அப்புறமென்ன, இனி கம்பளி ஆடைகள் வாங்கும் போது, மெரீனோ வகை கம்பளி ஆடைகளை வாங்கிப் பயன்படுத்துங்கள்...!