ARTICLE AD BOX
பிரதமர் நரேந்திர மோடியின் 119-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் வானொலியில் ஒலிபரப்பானது. அப்போது உடல் பருமன் பிரச்சினை குறித்து பிரதமர் மோடி விரிவாக பேசினார்.
இது தொடர்பாக மோடி பேசுகையில், "எட்டு பேரில் ஒருவர் உடல் பருமன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு உள்ளார். குழந்தைகளிடம் உடல் பருமன் பிரச்சினை 4 மடங்கு அதிகரித்திருக்கிறது. ஆரோக்கியமான தேசத்தை உருவாக்க முதலில் உடல் பருமன் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். உடல் எடையை குறைக்க ஓர் அறிவுரையை கூறுகிறேன்.நீங்கள் தற்போது பயன்படுத்தும் சமையல் எண்ணெயில் 10 சதவீதத்தை குறைத்து கொள்ளுங்கள். சமையல் எண்ணெய் வாங்கும்போதே 10 சதவீதத்தை குறைத்து வாங்குங்கள். உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாட்டை கண்டிப்புடன் கடைப்பிடியுங்கள்" என்று அறிவுறுத்தினார்.
மேலும் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, குத்துச் சண்டை வீராங்கனை நிகித் ஜரீன், மருத்துவர் தேவி ஷெட்டி ஆகியோரும் பிரதமரோடு இணைந்து சத்தான உணவு வகைகள் மற்றும் உடற்பயிற்சியின் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர்.
மனதில் குரலில் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "சமையல் எண்ணெய் பயன்பாட்டை நீங்கள் குறைத்தால் மட்டும் போதாது. உங்களுக்கு தெரிந்த 10 பேரிடம் சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைக்க சவால் விடுங்கள். இந்த விழிப்புணர்வு முயற்சி நாட்டின் உடற்பருமன் பிரச்சினையை எதிர்த்து போராட பேருதவியாக இருக்கும்" என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் நேற்று திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், "கடந்த 23-ம் தேதி ஒலிபரப்பான மனதின் குரல் நிகழ்ச்சியில் சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைப்பது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்க அறிவுறுத்தினேன். இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுத்து செல்ல 10 பிரபலங்களை முன்மொழிகிறேன்.
தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, போஜ்புரி நடிகர் தினேஷ் லால் யாதவ், துப்பாக்கி சுடும் வீராங்கனை மனு பாக்கர், பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, நடிகர் மோகன்லால், இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நீலகேணி, காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, நடிகர் மாதவன், பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், மாநிலங்களவை எம்.பி சுதா மூர்த்தி ஆகியோரை பரிந்துரைக்கிறேன்.
உங்களுக்கு நான் சவால் விடுத்துள்ளேன். நீங்கள் 10 பேரும் சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைக்க வேண்டும். அதோடு உங்களுக்கு தெரிந்த 10 பேருக்கு சவால் விடுக்க வேண்டும். நாம் ஒன்றிணைந்து உடல் பருமனுக்கு எதிரான போரை தொடங்குவோம்." என்று அவர் தெரிவித்து இருந்தார்.