ARTICLE AD BOX
கோவை, ராம்நகர் பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு பூங்காவில் 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதனை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர். இதனை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
அப்போது, "வானதி பொறுப்பேற்ற நாளில் இருந்து இந்த சட்டமன்ற தொகுதியை முதல் நிலை சட்டமன்ற தொகுதியாக மாற்ற வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிகழ்ச்சிக்காக நான் வந்து இருப்பதால் இங்கு இருக்கக் கூடிய பூங்காவை பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. இந்த பூங்கா பசுமை நிறைந்ததாக இருக்க வேண்டும் என்பதற்காக தினம் தோறும் ஒவ்வொரு மரத்திற்கு தண்ணீர் விடுகிறோம் என்று கூறினார்கள்.
எந்த ஒரு விஷயத்தை புதிதாகக் கொண்டு வந்தாலும் அதற்கு உரிய பயிற்சி வழங்க வேண்டும். மாணவர்களுக்கே புதிதாக ஒரு பாடத் திட்டத்தை கொண்டு வருகிறோம் என்றால் குறைந்தபட்சம் அந்த ஆசிரியர் மூன்று வருடம் அதை கற்று தீர்த்து இருக்க வேண்டும். கல்வித் துறை அமைச்சரும், முதல்வரும் இதில் உரிய கவனம் எடுத்து, இலகுவான அணுகு முறையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில், காமராஜருடைய காலகட்டத்தில் 30 ஆயிரம் பள்ளிக் கூடங்கள் ஆரம்பிக்கப்பட்டது. அன்றைய கால கட்டத்தில் அரசு பள்ளியில் படிக்கக் கூடிய அத்தனை மாணவர்களுக்கும், இலவச கல்வி கொடுக்கப்பட்டது. முதல்வர் அவர்களுக்கு என்னுடைய தாழ்மையான கோரிக்கை. தயவு செய்து இந்த நேரத்தில் நீங்கள் கட்டாயமாக ஒன்றை செய்தாக வேண்டும். அதன்படி, இங்கு இருக்கும் தனியார் பள்ளிகளை யாரெல்லாம் நடத்துகிறார்கள் என்றும், எந்த பள்ளிகளில் எல்லாம் இந்தி கற்றுக் கொடுக்கப்படுகிறது என்றும் விவரங்களை வெளியிட வேண்டும்.
மேலும், அரசு பள்ளிகளின் எண்ணிக்கை, அங்கு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, அரசு பள்ளிகள் மூடப்பட்டதால் அங்கு இருக்கும் மாணவர்களின் கல்வி எவ்வாறு பாதிக்கப்பட்டது என்றும் விவரங்களை வெளியிட வேண்டும். மேலும், என்னைப் பொறுத்தவரை தமிழ் நம்முடைய உயிர். தமிழை ஒழிப்பதற்கு எவ்வளவு பெரிய கொம்பன் வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
அதேபோல், தமிழை வைத்து பிழைப்பு நடத்த வேண்டும் என யார் வந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். மத்திய அரசு ரூ. 10 ஆயிரம் கோடி நிதி தந்தாலும் அதை ஏற்க மாட்டோம் என முதல்வர் சொல்கிறார். இதை அவரது ஆணவ பேச்சாக பார்க்கிறேன். இது முறையற்ற பேச்சாக தெரிகிறது" எனக் கூறினார்.