ARTICLE AD BOX
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம், பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நேற்றைய தினம் (மார்ச் 15) லண்டனில் இருந்து ஏ.ஆர். ரஹ்மான் சென்னை திரும்பினார். இந்த சூழலில் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் இயங்கி வரும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறிப்பாக, அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன்பேரில், அவரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருவதாக தெரிகிறது. இன்று (மார்ச் 16) காலை சுமார் 7:30 மணிக்கு, ஏ.ஆர். ரஹ்மானை சிகிச்சைக்காக அனுமதித்ததாக கூறப்படுகிறது. இருதய நிபுணர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவருக்கு பல்வேறு கட்ட மருத்துவ சோதனைகள் நடத்தப்படுவதாக கூறப்படும் நிலையில், சிகிச்சை முடிந்ததும் அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அண்மையில் மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்' உள்ளிட்ட பல படங்களில் ஏ.ஆர். ரஹ்மான் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.