தமிழ்நாடு உள்பட ஐந்து மாநிலங்களில் அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தென் மாநிலங்களில் இந்தி திணிப்பு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை கட்டாயமாக்கப்படுமா?

புதிய கல்விக் கொள்கை மூலம் இந்தி திணிப்பு விவகாரம், தமிழ்நாட்டில் மீண்டும் சூடுபிடித்துள்ளது. திட்டத்தை அமல்படுத்த முடியாவிட்டால் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்க முடியாது என மத்திய பாஜக அரசு கூறி வருகிறது. தமிழ்நாடு அரசோ நிதியை நிறுத்தினாலும், புதிய கல்விக் கொள்கையை ஏற்கமாட்டோம் என கூறி வருகிறது. புதிய கல்விக்கொள்கை மூலம் இந்தி மொழியை மத்திய அரசு திணிப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தி திணிப்பு விவகாரம், உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது. தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களில் மும்மொழி பாடத்திட்டத்துடன் கூடிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த உத்தரவிடக் கோரி தமிழக பாஜகவின் சட்டப் பிரிவுத் தலைவரும் வழக்கறிஞருமான ஜி.எஸ். மணி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு:

அந்த மனுவில், "அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கமாகும். தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகள் இந்தி திணிப்பு என்ற பொய்யான காரணத்தைக் கூறி, அரசியல் காரணங்களுக்காக இந்தத் திட்டத்தை ஏற்க மறுக்கின்றன" என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம், இந்த விவகாரம் குறித்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், "தென் மாநிலங்களில் இந்தியைத் திணிக்கும் மற்றொரு முயற்சியே மும்மொழி கொள்கையாகும். இது, தொகுதி மறுசீரமைப்புடன் தொடர்புடையது.

கலாச்சார ஆதிக்க முயற்சிக்கு அரசியல் கருவியே தொகுதி மறுசீரமைப்பு. இந்தி திணிப்பு என்பது இந்தி பேசாத மாநிலத்தின் கலாச்சார பாரம்பரியத்திற்கு சாவு மணி அடிக்கிறது. இதை தடுக்க மற்றொரு மொழி போருக்கும் தயாராக உள்ளோம்" என்றார்.

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் அடுத்தாண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் இந்த விவகாரம் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் பாஜகவை தவிர பெரும்பாலான தென் மாநில அரசியல் கட்சிகள், இருமொழி கொள்கைக்கே ஆதரவு தெரிவித்துள்ளன.