ARTICLE AD BOX
நாம் ஏதோ ஒன்றை நினைத்து அதை வெற்றிக்கு வழி வகுப்பதாக கொண்டு செல்லவேண்டும் என்றால் அதற்கு எண்ணம் சீராக இருக்க வேண்டும். நல்ல எண்ணங்கள் நலமாக வித்திடும். நல்ல வழியில் செல்லும்போது எல்லாமே நன்மையில் முடியும். சில நேரங்களில் சில அசம்பாவிதங்கள் நடக்க இருந்தாலும் செல்லும் பாதை நல்ல பாதையாக இருப்பதால் அதை இறுதியில் நல்ல வழிக்கு கொண்டு வந்துவிட முடியும்.
நல்ல புரிதல்:
யார் எந்த விஷயத்தை சொன்னாலும் அதை நல்லவிதமாக புரிந்துகொள்ள வேண்டும். நாமாக அதற்கு ஒரு அர்த்தத்தை ஏற்படுத்திக் கொண்டு பிரச்னைக்கு வழிவகுக்காமல் இருந்தால் அதன் மூலம் நாம் பேசும் பேச்சு எடுபடும். இதனால் எந்த நேரத்திலும் விலகி இருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படாது. ஆதலால் சுற்றம் சூழ வாழ்வதற்கு நல்ல புரிதல் அவசியம்.
விட்டுக்கொடுத்தல்:
வீட்டில் பெற்றோர்கள், உற்றார், உறவினர், நட்பு, கணவன், மனைவி யாராக இருந்தாலும் ஏதாவது ஒரு விஷயத்தை சொன்னால் அதற்காக குறைபட்டுக் கொண்டு ஒதுங்கிவிடாமல் அடுத்த முறை பேசும் பொழுது சகஜமாக பேசும்படி வார்த்தைகளை பேச வேண்டும். குத்தல், குதறல் போன்ற வார்த்தைகளை மறந்தும் பிரயோகிக்காமல் இருப்பது நல்லது.
அப்படி சில நேரங்களில் நம் குறைகளை எடுத்துக் கூறினால் அதை இயல்பாக எடுத்துக்கொண்டு அடுத்தமுறை நீயா நானா என்று போட்டி போடாமல் முகம் கொடுத்து தானே முன் நின்று பேசுவதற்கும் முன் வரவேண்டும். வீட்டார் ஒரு பொருளை தனக்கு பிடிக்கிறது என்று எடுத்துக் கொண்டால் அதை முகம் மலர்ந்து விட்டுக் கொடுத்துப் பாருங்களேன். அடுத்தமுறை அவர்களாகவே உங்களுக்கு ஒரு பொருளை விட்டுத்தர முன்வருவார்கள்.
உரிமை கொண்டாடுதல்:
எந்த ஒரு பொருளையும் தனக்கு மட்டுமே சொந்தம் என்று உரிமை கொண்டாடுவது சிலருக்கு பழக்கம். அதேபோல் தன் அண்ணன், தங்கை, அக்கா போன்ற உறவுகள் தன்னை விட்டு மற்றவர்களிடமும் அதிகமாக பாசம் காட்டினால் அதை பிடிக்காதவர்களும் இருக்கிறார்கள். அதேபோல் கணவர் மற்ற பெண்களிடம் பேசினாலும், மனைவி மற்றவர்களிடம் பேசினாலோ அதையும் பொறுத்துக் கொள்ளாதவர்களும் இருக்கிறார்கள். அதை தவறாக புரிந்து கொள்ளாமல் உறவுக்கு, நட்புக்கு பாலம் அமைக்கும் வழி என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.
திணிப்பை நிறுத்துங்கள்;
நாம் எதை நினைக்கிறோமோ அதையே வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் செய்ய வேண்டும் என்று தம் எண்ணத்தை திணிப்பதை நிறுத்த வேண்டும். அவர்களுக்கும் சொந்த விருப்பு வெறுப்பு இருக்கும். அவர்களின் வாழ்க்கையை அவர்களின் இயல்பு வழி வாழ விடுவதுதான் சிறந்தது. ஆதலால் படிப்பு, கலை, வேலை, பேசும் விதம் அனைத்திலும் தன்னுடைய எண்ணத்தை திணிக்காமல் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பது நல்லது.
மனம் விட்டு பேசுவது:
எந்த ஒரு விஷயத்தையும் சந்தேகப்படாமல் மனம் விட்டு பேசி விட்டால் வீட்டில் உள்ள அனைவருக்கும் நிம்மதி கிடைக்கும். அவர்களும் அதுபோல அவரவர்களின் இன்பத் துன்பங்களை பகிர்ந்துகொள்ள முன்வருவார்கள். ஆதலால் அவரவர் எண்ணத்தை மனம் விட்டு பேசினால் எல்லாவற்றுக்கும் தீர்வு கிடைக்கும். ஆதலால் செயலாற்றும் பொழுது எண்ணும் எண்ணம் சீராக இருக்கும். எதுவும் தடைபடாது.
எல்லாம் எனதாக வேண்டும் என்று எண்ணுவதை விட எண்ணம் எல்லாம் நிலையானதாக வேண்டும் என்று எண்ணுவதே உண்மையான இன்பம்.