ARTICLE AD BOX
திருப்பூர்,
கோவையில் 17 வயது சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் திருப்பூரில் கணவர் மற்றும் குழந்தையின் கண் முன்னே இளம்பெண் ஒருவர் கத்தி முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் தனது கணவன், குழந்தையுடன் வேலை தேடி திருப்பூர் வந்தார். பின்னர் திருப்பூரை அடுத்த தெக்கலூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த அவர், வேலை பிடிக்காததால் மீண்டும் ஒடிசா திரும்ப முடிவு செய்து திருப்பூர் ரெயில் நிலையம் வந்து கொண்டிருந்தனர். அங்கு புஷ்பா பஸ் நிறுத்தத்தில் நீண்ட நேரம் காத்து இருந்துள்ளனர்.
அப்போது அவர்களிடம் பீகார் மாநிலத்தை சேர்ந்த நதீம் (வயது 24), டானிஷ் (25), முர்சித் ஆகியோர் அறிமுகமாகி நாங்கள் வேலை பார்க்கும் பனியன் நிறுவனம் அருகில் தான் உள்ளது, அங்கு உங்களை வேலைக்கு சேர்த்து விடுகிறோம் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.
இதனை நம்பியதும் அந்த தம்பதியை பீகாரை சேர்ந்த 3 பேரும் தாங்கள் தங்கி உள்ள லட்சுமி நகர் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு இரவு உணவு சாப்பிட்டு விட்டு, அனைவரும் ஒரே அறையில் தூங்க சென்றனர். நள்ளிரவு நேரம் நதீம், டானிஷ், முர்சித் ஆகியோர் கத்தி முனையில் அந்த இளம்பெண்ணையும், கணவரையும் மிரட்டி கணவன்-குழந்தை கண்முன்னே 3 பேரும் அந்தப்பெண்ணை ஒருவர் மாற்றி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அந்த தம்பதியை வெளியில் அனுப்பியுள்ளனர். இதுகுறித்து அந்த தம்பதி, திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் உடனே விரைந்து சென்று நதீம், டானிஷ் மற்றும் முர்சித் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல், தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.