ARTICLE AD BOX
பிரிட்டன், அயர்லாந்து ஆகிய நாடுகளுக்கு ஆறு நாள் பயணமாகச் சென்றுள்ளார், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர். இந்தப் பயணத்தில் நேற்று புதன்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காகச் சென்றிருந்த அவருடைய காரின் முன்னால் திடீரென ஒரு காலிஸ்தான் ஆதரவாளர் சத்தமிட்டபடி, இந்திய தேசியக் கொடியைக் கிழித்து அவமரியாதை செய்தார்.
இந்தியாவுக்கு எதிரான இந்த அவமதிப்பு குறித்து நாடு முழுவதும் பரவலான எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், இந்திய வெளியுறவுத் துறை சார்பில் இந்த விவகாரம் குறித்து இன்று மாலையில் கருத்து வெளியிடப்பட்டது.
வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் இரந்தீர் ஜெய்ஸ்வால், “ இப்படியான சக்திகள் ஜனநாயக சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைக் கண்டிக்கிறோம். பிரிட்டன் அரசாங்கம் தன்னுடைய அரசரீதியான கடமையைச் செய்யும் என எதிர்பார்க்கிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து பிரிட்டன் தரப்பின் கருத்தைக் கேட்க ராய்ட்டர்ஸ் செய்தி முகமை முயன்றதில், அவர்களுக்கு உடனடியாக பதில் ஏதும் கிடைக்கவில்லை.
முன்னதாக, இலண்டனில் உள்ள சத்தம் அவுஸ் எனும் கருத்தாளர் அமைப்பின் கூட்டத்தில் ஜெய்சங்கர் பேசியபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில் காலிஸ்தான் ஆதரவு இயக்கத்தினர் முழக்கங்களை எழுப்பினர்.
அதில் ஒருவர்தான் காவல்துறையின் தடுப்பை மீறி ஜெய்சங்கரின் கார் முன்னால் போய் அதிரடியாக இந்தியக் கொடியை அவமதிப்புக்கு உள்ளாக்கினார். ஆனாலும் சில நொடிகளில் அவரைக் காவல்துறையினர் தூக்கிச்சென்று அப்புறப்படுத்தினர்.