ARTICLE AD BOX
மிருகங்களின் இயல்பான இரவு நேர நடவடிக்கைகளை நேரடியாக அதன் அருகில் இருந்து பார்க்க வாய்ப்புகளை வழங்குகிறது இரவு நேர சஃபாரிகள். சிங்கப்பூரின் இரவு சஃபாரி என்பது ஒரு திறந்தவெளி மிருகக் காட்சி சாலையாகும், இது இரவில் மட்டுமே பொதுமக்களுக்கு திறந்திருக்கும். உலகிலேயே முதன் முறையாக இரவு நேரங்களில் மிருகங்களை பார்க்க நைட் சஃபாரி மூலம் அனுமதித்தது சிங்கப்பூர் மிருகக்காட்சி சாலைதான்.
சிங்கப்பூர் இரவு சஃபாரி முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இந்த பூங்கா சிங்கப்பூர் மிருகக்காட்சி சாலைக்கு அடுத்ததாக உள்ளது. இரவு சஃபாரி மே 26, 1994 அன்று திறக்கப்பட்டது. இரவு சஃபாரியில் கிட்டத்தட்ட 130 தனித்துவமான உயிரினங்களை காணலாம் . சிங்கப்பூர் இரவு சஃபாரியின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்று அடர்ந்த புதர்கள் வழியாக டிராம் சவாரி செய்வது.
சிங்கப்பூரை அடுத்து ஆப்பிரிக்காவில் உள்ள சாபி பகுதி நைட் சஃபாரியும் புகழ்பெற்றதுதான். இந்த சஃபாரியில் சிறுத்தை, கழுதைப்புலி மற்றும் எறும்புண்ணிகளை காணலாம். இதனையடுத்து ஆஸ்திரேலியாவின் அலைய்ன் டிசர்ட் பார்க்கில் இரவு நேர சஃபாரியில் பாலைவன விலங்குகளை காணலாம்.
சிலிர்ப்பூட்டும் இரவு சஃபாரிகளை வழங்கும் இந்திய தேசிய பூங்காக்கள்
இந்தியாவில் இரவு நேர சஃபாரிகளை வழங்கும் சில தேசிய பூங்காக்கள் உள்ளன, அவை பார்வையாளர் களுக்கு வனவிலங்குகளின் இரவு வாழ்க்கையைப் பற்றிய அரிய பார்வையை வழங்குகின்றன. இரவு சஃபாரிகள் கிடைக்கும் சில இந்திய தேசிய பூங்காக்கள் இங்கே:
சத்புரா தேசிய பூங்கா, மத்திய பிரதேசம: இந்தியாவில் இரவு நேர சஃபாரிகளை அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கும் சில பூங்காக்களில் சத்புரா தேசிய பூங்காவும் ஒன்றாகும். இது ஹோஸன்கா பாத் மாவட்டத்தில் உள்ளது. செஹ்ரா, ஜமானிதேவ் மற்றும் பர்சபானி ஆகிய பகுதிகளில் இரவு நேர சஃபாரிகள் கிடைக்கின்றன. சிறுத்தைகள், சோம்பல் கரடிகள் மற்றும் பல்வேறு இரவு நேர விலங்குகளைக்காண பார்வையாளர்களுக்கு இங்கே வாய்ப்பு கிடைக்கிறது.
ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா; உத்தர்காண்ட் மாநிலத்தில் இமயமலை அடிவாரத்தில் உள்ளது. இந்தியாவின் முதல் பெங்கால் புலிகளின் சரனாலயமான இங்கும் நைட் சஃபாரி உண்டு. இந்த நைட் சஃபாரியில் சிறுத்தைகள், புணுக பூனைகளை காணலாம்.
கன்ஹா தேசிய பூங்கா, மத்திய பிரதேசம்: பிரபலமான புலிகள் காப்பகமான கன்ஹா, பூங்கா மத்திய பிரதேசம் பாலாகாட் மற்றும் மண்ட்லா மாவட்டத்தில் உள்ளது. இரவு நேர சஃபாரிகளையும் வழங்குகிறது. இரவு நேர சஃபாரி சுற்றுலாப்பயணிகளுக்கு சிவெட்டு பூனைகள், முள்ளம்பன்றிகள் மற்றும் சில நேரங்களில் சிறுத்தைகள் போன்ற இரவு நேர விலங்குகளைக்காண அனுமதிக்கிறது. இரவில் வனப்பகுதியைப் பார்ப்பது வேறு விதமான அனுபவம் தரும். இரவு நேரத்தில் குறைந்த வெளிச்சத்தில் ஆள் அரவமற்ற நிலையில் வானில் நட்சத்திரங்களை பார்ப்பது தனியான சுக அனுபவத்தை தருகிறது.
பாந்தவ்கர் தேசிய பூங்கா; மத்திய பிரதேசம் சமாரியா மாவட்டத்தில் உள்ளது பந்தவ்கர் தேசிய பூங்காவின் பராசி & பச்பேடி மண்டலமும் இரவு சஃபாரி வழங்குகிறது. சஃபாரியின்போது, பயணிகள் காட்டுப் பூனைகள், சிறுத்தைகள் மற்றும் ஆந்தைகள் உள்ளிட்ட பல்வேறு இரவு உயிரினங்களை பார்க்கலாம். இரவு சஃபாரி மாலை 6:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை நடைபெறும்.
பென்ச் தேசிய பூங்கா, மத்திய பிரதேசம்: பென்ச்சின் ஓநாய் சரணாலய மண்டலம் இரவு சஃபாரிக்கு மிகவும் பிரபலமானது. இது மத்தியப்பிரதேசம் சியோனி மாவட்டத்தில் உள்ளது. இது சுற்றுலாப்பயணிகளுக்கு பூங்காவின் இரவு நேர வனவிலங்குகளைக்காண வாய்ப்பளிக்கிறது. இந்த சஃபாரி இந்திய ஓநாய், கழுதைப்புலி மற்றும் பல்வேறு இரவு நேர பறவைகள் போன்ற உயிரினங்களைக்காண வாய்ப்புகளை வழங்குகிறது.
ஜலானா சிறுத்தை சஃபாரி பூங்கா, ராஜஸ்தான்: ஜலானாவில், இரவு சஃபாரி சூரிய அஸ்தமனத்திற்கு ஒரு மணி நேரத்திற்குப் பிறகு தொடங்குகிறது, ஜலனா சிறுத்தை சஃபாரி பூங்கா அதன் சிறுத்தை பார்வைகளுக்கு நன்கு அறியப்பட்டதாகும், மேலும் இரவு சஃபாரி சிறுத்தைகள், நரிகள் மற்றும் பிற வனவிலங்குகளை அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் காண ஒரு சரியான வாய்ப்பாகும்.இது ஜெய்ப்பூர் நகரின் புறநகர் பகுதியில் அமைந்துள்ளது.
பன்னா தேசிய பூங்கா: மத்திய பிரதேசம் சத்தர்பூரில் பன்னா புலிகளின் சரனாலயம் உள்ளது., இது ஜின்னா மண்டலம் மற்றும் அகோலா மண்டலம் போன்ற அதன் இடைப் பகுதிகளில் இரவு சஃபாரிகளையும் வழங்குகிறது. மார்ச் முதல் செப்டம்பர் வரை, மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இரவு சஃபாரி சீசன் ஆகும். பன்னாவில் இரவு சஃபாரிக்கு குறைந்த எண்ணிக்கையிலான சஃபாரி ஜீப்புகள் மட்டுமே உள்ளன.இங்கே பெங்கால் டைகர், ஓநாய், சிறுத்தை, சாம்பல் நிற காட்டுப்பூனைகளை காணலாம்.