ARTICLE AD BOX

சென்னை : அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஜெயலலிதா மறைந்த பிறகு எடப்பாடி பழனிச்சாமி – ஓ.பன்னீர்செல்வம் என இரண்டாக பிரிந்த அதிமுகவில், தற்போது ஓபிஎஸ் முழுதாக ஓரங்கபட்டப்பட்டு அதிமுக பொதுச்செயலாளராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் எடப்பாடி பழனிச்சாமி தான் தொடர்ந்து வருகிறார். இருந்தும் இபிஎஸ் – ஓபிஎஸ் பிரச்சனை அவ்வப்போது எழுந்து வந்துகொண்டுதான் இருக்கிறது .
இபிஎஸ் – செங்கோட்டையன் :
இதற்கிடையில் தற்போது புது உட்கட்சி பிரச்சனையாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இடையேயான பனிப்போர் உருவாகியுள்ளது. இதனை இருவருமே வெளிப்படையாக ‘அப்படியெல்லாம் ஒன்றுமில்லை’ என மறுத்தாலும் அடுத்தடுத்த நிகழ்வுகள் அதனை தொடர்ந்து உறுதிப்படுத்தி கொண்டே இருக்கின்றன.
செங்கோட்டையன் :
முதன் முதலாக அத்திக்கடவு – அவிநாசி திட்டம் செயல்படுத்தப்பட்டதற்கு விவசாய அமைப்புகள் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து நிகழ்ச்சி நடத்தினர். அந்த நிகழ்வில் செங்கோட்டையன் பங்கேற்காமல் இருந்தது தான் இந்த ‘பனிப்போர்’ பேச்சுகளுக்கு அச்சாரமாக இருந்தது. அதனை தொடர்ந்து நடந்த நிகழ்வில் எடப்பாடி பெயரை சொல்லலாம் விட்டு சென்றது. “எனக்கு வாய்ப்புகள் வந்தபோதும் , கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் என செயல்பட்டு வருகிறேன்” என செங்கோட்டையன் கூறியதும் பேசுபொருளானது.
இபிஎஸ் நியமனம் :
அடுத்ததாக, எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனத்தை அறிவித்தார். அதில் செங்கோட்டையன் பெயர் இல்லை. இப்படியாக அடுத்தடுத்த அரசியல் நிகழ்வு நடைபெறும் வேளையில் இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதவின் 77வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
செங்கோட்டையன் அப்சென்ட் :
இதற்கான விழா இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் செங்கோட்டையன் இந்த நிகழ்விலும் கலந்துகொள்ளவிலை. அதே நேரம் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் அதிமுக சார்பில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் செங்கோட்டையன் பங்கேற்றார்.
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் அதிமுக சார்பில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா நிகழ்வில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பெயர் குறிப்பிடப்படாமல் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.