ARTICLE AD BOX
இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்.பி.ஐ) முன்னாள் கவர்னரான சக்திகாந்த தாஸ் பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை செயலாளராக கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 22) நியமிக்கப்பட்டார். பணவியல் கொள்கை (மத்திய வங்கியால் கட்டுப்படுத்தப்படும்) மற்றும் நிதிக் கொள்கை (அரசாங்கத்தால் வகுக்கப்பட்ட) ஆகிய இரண்டிலும் பணிபுரிந்த அனுபவம் வாய்ந்த அதிகாரியாக இவர் கருதப்படுகிறார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Shaktikanta Das appointed new Principal Secretary: What does the post entail?
இது தவிர கூடுதல் சிறப்பு ஒன்றையும் சக்திகாந்த தாஸ் பெறுகிறார். அந்த வகையில், மல் ஜலானைத் தவிர (1997-2003) ஆர்.பி.ஐ கவர்னராக ஆறு ஆண்டுகள் பதவி வகித்தது இவர் மட்டுமே.
சக்திகாந்த தாஸ் யார்?
1980-ல் தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தனது பயணத்தை சக்திகாந்த தாஸ் தொடங்கினார். டெல்லி பல்கலைக்கழகத்தில் செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் வரலாற்றுப் பட்டதாரியான இவர், 2014ல் உரத்துறை செயலாளராக இருந்தார்.
இதைத் தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான பா.ஜ.க அரசின் கீழ் அவர் ஆகஸ்ட் 2015-இல் பொருளாதார விவகார செயலாளராக நியமிக்கப்பட்டார். 2017-ல் ஓய்வு பெறும் வரை அவர் இப்பதவியில் இருந்தார். 15வது நிதி ஆணையத்தின் உறுப்பினராகவும் சக்திகாந்த தாஸ் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அவர் 2018 முதல் டிசம்பர் 2024 வரை ரிசர்வ் வங்கியின் கவர்னராக பணியாற்றினார். அவரது நியமனம் குறித்து அதிகாரப்பூர்வ வெளியீட்டில் பல்வேறு தகவல்கள் இடம்பெற்றிருந்தன. "இந்திய அரசின் நிதி அமைச்சகத்தில் அவர் நீண்ட காலம் பணியாற்றிய போது 8 யூனியன் பட்ஜெட்களைத் தயாரிப்பதில் நேரடியாக தொடர்பில் இருந்தார். உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி (ADB), புதிய வளர்ச்சி வங்கி (NDB) மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) ஆகியவற்றில் இந்தியாவின் மாற்று கவர்னராக அவர் பணியாற்றியுள்ளார். ஐ.எம்.எஃப், ஜி20, பிரிக்ஸ் மற்றும் சார்க் போன்ற சர்வதேச அமைப்புகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் கோவிட் தொற்று, ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் போன்ற பல்வேறு நிதி தொடர்பான பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளன. மேலும், ரூ .2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதை அவர் மேற்பார்வையிட்டார். யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யு.பி.ஐ), ரூபே போன்ற நெட்வொர்க்கை உலகளவில் உருவாக்குவது குறித்தும் தாஸ் கவனம் செலுத்தினார். இருப்பினும் நீடித்த பணவீக்கம் கடந்த ஆறு ஆண்டுகளில் பெரும் சவாலாகவே இருந்தது.
முதன்மை செயலாளர் பதவி என்றால் என்ன?
பிரதமர் அலுவலகத்தின் (PMO) நிர்வாகத் தலைவராக முதன்மைச் செயலாளர் இருக்கிறார். மேலும், பிரதமரின் மிக முக்கியமான உதவியாளராக இப்பதவி கருதப்படுகிறது. தற்போது, 1972-ம் ஆண்டு பேட்ச்சைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான பிரமோத் குமார் மிஸ்ரா முதன்மை செயலாளராக உள்ளார். அதன்படி, இரண்டாவது முதன்மை செயலாளராக சக்திகாந்த தாஸ் இருப்பார்.
பொதுவாக, பிரதமர் அலுவலகத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பிரதமரின் ஆலோசகர், கூடுதல் செயலாளர்கள், இணைச் செயலாளர்கள் மற்றும் பிற மூத்த அதிகாரிகளும் அடங்குவர். பிரதமருக்கும் வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கும் இடையே விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் ஒருங்கிணைப்பை உறுதி செய்தல், பிரதமருக்கு முன் முக்கிய உத்தரவுகளைப் பகிர்தல் மற்றும் பல வகையான குறிப்புகளைத் தயாரிப்பது ஆகியவை முதன்மைச் செயலாளரின் பணியாகும்.