ARTICLE AD BOX
தோசை, தென்னிந்திய பாரம்பரிய உணவுகளில் மிக முக்கியமானதாகும். எத்தனையோ வகையான தோசைகளை கேள்விப்பட்டிருக்கலாம். அவற்றில் ஒன்று தான் இந்த வெள்ளரிக்காய் தோசை. இது கொஞ்சம் வித்தியாசம். ஆனால் நிறைய ஹெல்தி தோசையாகும். வழக்கமாக தோசைக்காக அரிசி, உளுந்து ஊற வைத்து, மாவு அரைத்து, குறைந்த பட்சம் 5 மணி நேரமாவது புளிக்க விடவேண்டும். ஆனால், இந்த இன்ஸ்டன்ட் வெள்ளரிக்காய் தோசை செய்வதற்கு மாவு புளிக்க வேண்டும் என்ற தேவையும் இல்லாத, உடனே தயாரிக்கக்கூடிய ஒரு ஆரோக்கியமான டிபன்.
தேவையான பொருட்கள்:
வெள்ளரிக்காய் – 1 பெரியது (துருவி எடுத்தது)
அரிசி மாவு – 1 கப்
கடலை மாவு – 1/4 கப்
ரவை – 2 டேபிள்ஸ்பூன் (தோசைக்கு மிருதுவான மற்றும் கிரிஸ்பியான தன்மை தரும்)
தயிர் – 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது (நறுக்கியது)
கொத்தமல்லி – சிறிதளவு
மிளகாய் – 1 (நறுக்கியது)
இஞ்சி – 1 இன்சி (துருவியது)
சீரகம் – 1 டீஸ்பூன்
வெங்காயம் – 1 (சிறியதாக நறுக்கியது, கூடுதல் ருசிக்கு)
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – தோசைக்கு தேவையான அளவு
கெட்ட கொழுப்புக்களை இயற்கையான முறையில் குறைக்க...இதை டிரை பண்ணுங்க
செய்முறை:
- வெள்ளரிக்காயை நன்றாக துருவி, அதிலிருந்து விதைகளை அகற்றி விட வேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, ரவை சேர்த்து கலந்து கொள்ளவும்.
- இதனுடன் தயிர், வெள்ளரிக்காய் துருவல், உப்பு, மிளகாய், இஞ்சி, வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, சீரகம் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- ரவை சேர்த்துள்ளதால் அது ஊறுவதற்காக 5 நிமிடங்கள் அப்படியே மூடி வைக்கலாம்.
- நீங்கள் சட்னி தயாரிக்கும் நேரத்தில் ரவை ஊறி, அதோடு சேர்ந்த பொருட்களின் சுவையும் மாவில் கலந்து விடும்.
- தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்தில் மிருதுவாகக் கலக்கவும். மாவு கெட்டியாக இருக்கக்கூடாது.
- தோசைக் கல்லை சூடாக்கி, சிறிதளவு எண்ணெய் தெளித்து மாவை ஊற்றவும்.
- தோசை மீது சிறிதளவு எண்ணெய் தெளித்து, குறைந்த தீயில் இருபுறமும் பொன்னிறமாகும் வரை சமைத்து எடுக்கவும்.
- பரிமாறுவதற்கு முன்பு தோசையை கரகரப்பாக இருக்கும் அளவிற்கு சிறிது நேரம் வேகவிடலாம்.
இன்ஸ்டன்ட் வெள்ளரிக்காய் தோசையை தேங்காய் சட்னி, புதினா சட்னி, காரச்சட்னி அல்லது தக்காளி சாம்பார் உடன் பரிமாறலாம். வெள்ளரிக்காயின் இயற்கையான சுவை, மிருதுவான தோசை மற்றும் இதன் உடனடி தயாரிப்பு என அனைத்தும் உங்கள் காலை உணவை ஆரோக்கியமாகவும், ருசியாகவும் மாற்றும்.
ஆரோக்கிய நன்மைகள் :
- வெள்ளரிக்காய் உடல் வெப்பத்தை குறைத்து, சீரான ஜீரணத்தை உறுதிப்படுத்தும்.
- அரிசி மாவு மற்றும் கடலை மாவு சேர்வதால், இது ஒரு நல்ல கார்போஹைட்ரேட் மற்றும் புரதச் சத்து கொண்ட உணவாகும்.
- தயிரின் பாக்டீரியா வளம் ஜீரணத்திற்கு நல்லது.
- வெங்காயம் மற்றும் இஞ்சி ஜீரணத்தை ஊக்குவிக்கின்றன மற்றும் உடலுக்கு தேவைப்படும் ஆன்டி-ஆக்ஸிடென்டுகளை வழங்கும்.
- எண்ணெய் குறைவாக பயன்படுத்துவதால், இதனை டயட் தோசை என்றும் கூறலாம்.
- ரவை சேர்ப்பதால், தோசை நன்கு மொறு மொறுப்பாக இருக்கும் மற்றும் சிறந்த ருசியை கொடுக்கும்.
இந்த இன்ஸ்டன்ட் வெள்ளரிக்காய் தோசை உங்கள் பசிக்குத் தீர்வாகவும், ஆரோக்கியமான நாளின் தொடக்கமாகவும் அமையும். தற்போது வெயில் காலம் துவங்கி விட்டதால் பல இடங்களில் வெள்ளரிக்காய் எளிதாக கிடைக்கும். வாங்கி ஒருமுறை இந்த வெள்ளரிக்காய் தோசையை செய்து பாருங்கள்.