ARTICLE AD BOX
இன்னைக்கு தான் ரூ.1 கோடினா பெருசு.. 10 வருஷத்துக்கு அப்புறம் இதோட மதிப்பு இவ்ளோ தான் தெரியுமா?
தற்போதுள்ள இளைஞர்கள் மத்தியிலும், வேலைக்கு செல்வோர் மத்தியிலும் எதிர்காலத்திற்காக பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. அவ்வாறு முதலீட்டுக்கு திட்டமிடும் போது பண வீக்கத்தை அடிப்படையாகக் கொண்டு திட்டமிட வேண்டும். நீங்கள் எந்த ஒரு முதலீட்டு ஆலோசகரிடம் சென்றாலும் முதலில் இதைத்தான் கூறுவார்கள்.
இதற்கு முதலில் பணம் வீக்கம் என்றால் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்வது அவசியம். பொருட்களை வாங்க தேவையான பணத்தின் சக்தி குறைவதையே பணவீக்கம் என அழைக்கிறோம். அதாவது இன்று 10 ரூபாய் கொடுத்து நீங்கள் ஒரு பொருளை வாங்குகிறீர்கள் என்றால் அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் அதன் விலை 14 ரூபாய் அல்லது 15 ரூபாயாக இருக்கும் அதாவது அந்த பொருளுக்காக நீங்க செலுத்தக்கூடிய பணத்தின் மதிப்பு அதிகமாக இருக்கும்.

பிரபல நிதி ஆலோசகரான அக்சத் ஸ்ரீவாஸ்தவா இதனை மிகச்சிறந்த உதாரணத்தின் மூலம் எடுத்துரைத்துள்ளார். தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இன்றைய ஒரு கோடி ரூபாய் அடுத்த பத்து ஆண்டுகளில் என்னவாக இருக்கும் என்பதை கணக்கிட்டுள்ளார்.
பணவீக்க விகிதத்தை 7 சதவீதமாக கொண்டால் இன்றைய ஒரு கோடி ரூபாய் மதிப்பு
10 ஆண்டுகளில் = ரூ. 50 லட்சம்
15 ஆண்டுகளில் = ரூ. 36 லட்சம்
20 ஆண்டுகளில் = ரூ. 25 லட்சம்
இன்றைய காலகட்டத்தில் ஒரு கோடி ரூபாய் இருந்தால் நமக்கு நிதி பாதுகாப்பு கிடைக்கிறது. ஆனால் 10 ஆண்டுகளுக்கு பின் அதன் மதிப்பு பாதியாகிவிடும், 15 மற்றும் 20 ஆண்டுகளில் இன்னமும் குறைந்துவிடும் என கூறியுள்ளார். பணவீக்க அடிப்படையில் கணக்கீடு செய்தால் இன்றைய ஒரு கோடி ரூபாய் அன்றைய காலகட்டத்தில் சிறிய தொகையாக தான் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசும் , மத்திய வங்கிகளுமே பணவீக்கத்துக்கு காரணமாக அமைகின்றன. அதாவது பணத்தின் மதிப்பை குறைப்பதற்காகவும் மக்கள் தொகைக்கு ஏற்பவும் தேவைக்கு ஏற்பவும் மத்திய வங்கிகள் அதிக பணத்தை அச்சிடுகின்றன. இதனால் புழக்கத்தில் அதிக பணம் இருக்கும். இப்படி மக்களிடம் புழக்கத்தில் அதிக பணம் இருக்கும் போது அதன் வாங்கும் சக்தி குறைகிறது. இப்படி தான் பணவீக்கம் என்பது உருவாகிறது.
2018 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை சர்வதேச அளவில் நாடுகள் பணத்தை அச்சடிக்கும் விகிதம் சராசரியாக 8 சதவீதம் உயர்ந்துள்ளது என அக்சத் ஸ்ரீவாஸ்தவா கூறுகிறார். எனவே ஆண்டுக்கு 7 சதவீதத்துக்கும் அதிகமாக லாபம் தரும் முதலீட்டு கருவிகளில் முதலீடு செய்வதே சிறந்தது என அறிவுரை வழங்கியுள்ளார். நீங்கள் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால் இந்த பணவீக்க விகிதத்தை கவனத்தில் கொள்ளுங்கள்.
Story written by: Devika