ARTICLE AD BOX
இந்தியாவின் பிரதான நகரங்களில் வீடுகளின் விலை 10% வரை உயர்வு..
சென்னை: இந்தியாவில் சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி உள்ளிட்ட 8 நகரங்களில் கடந்த காலாண்டில் வீடுகளின் விலை 10% வரை உயர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.
கிரெடாய் எனப்படும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கான கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் 8 நகரங்களில் 2024 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் 10 சதவீதம் வரை வீடுகளின் மதிப்பு உயர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த நகரங்களில் எல்லாம் வீடுகளுக்கான தேவை அதிகரித்திருப்பதே இதற்கு முக்கிய காரணம் என கிரெடாயின் அறிக்கை குறிப்பிடுகிறது.

2021 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக 16வது காலாண்டிலும் இந்தியாவில் பிரதான நகரங்களில் வீடுகளின் விலை உயர்ந்திருக்கிறது எனவே வீடு விற்பனை சந்தை தொடர்ந்து பாசிட்டிவாகவே இருக்கிறது என இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதில் அதிகபட்சமாக டெல்லி என்சிஆர் பகுதியில் 31 சதவீதம் என வீடுகளின் மதிப்பு உயர்ந்திருக்கிறதாம். அதே போல பெங்களூருவில் வீடுகளின் விலை 23 சதவீதம் வரை அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகர் பகுதிகளில் வீடுகளின் தேவை அதிகரித்து இருப்பதன் காரணமாகவே வீடுகளின் விலை உயர்ந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் கட்டப்பட்டு விற்பனையாகாமல் இருந்த வீடுகளின் எண்ணிக்கை 5 சதவீதம் வரை குறைந்துள்ளதாம். அதாவது கடந்த இரண்டு ஆண்டுகளில் முதன்முறையாக இந்தியாவில் கட்டப்பட்டு விற்பனையாகாமல் இருந்திருக்கும் வீடுகளின் எண்ணிக்கை 10 லட்சத்திற்கு கீழ் குறைந்திருப்பதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
குறிப்பாக ஆடம்பர குடியிருப்புகளை வாங்கும் போக்கு அதிகரித்திருப்பதாக சொல்லப்படுகிறது. அது மட்டும் இன்றி கேட்டட் கம்யூனிட்டிகளில் வீடு வாங்குவதற்கு பலரும் விருப்பம் தெரிவிப்பதாக கிரெடாய் அமைப்பின் தலைவர் கூறுகிறார். அரசு வீட்டுக் கடன்களுக்கான வட்டியை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் வீடுகளின் விற்பனை இன்னும் அதிகரிக்கும் என அவர் கூறுகிறார்.
இந்த ஆண்டு முழுவதுமே வீடுகளின் விற்பனை பாசிட்டிவாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். டெல்லி மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் ஆடம்பர குடியிருப்புகளை வாங்கும் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அவர் தெரிவிக்கிறார். பெங்களூரு, புனே, அகமதாபாத் ஆகிய நகரங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வரும் இடங்களில் எல்லாம் வீடுகளின் மதிப்பு கணிசமாக அதிகரித்து இருப்பதாக கூறியுள்ளார் . சுமார் 15 சதவீதம் வரை உயர்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
வேலைவாய்ப்புக்காக நகரங்களை நோக்கி செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதித்தன. ஆனால் கடந்த ஆண்டு முதலே பல்வேறு ஐடி நிறுவனங்களும் ஊழியர்கள் கட்டாயம் அலுவலகத்திற்கு வர வேண்டும் என கூறிவிட்டன. எனவே ஊழியர்கள் மீண்டும் வேலைக்காக நகரங்களுக்கு வருவதால் வீடுகளுக்கான தேவையும் விலையும் உயர்ந்து வருகிறது.
Story written by: Devika