ARTICLE AD BOX

Image Courtesy: AFP / Virat Kohli
துபாய்,
8 அணிகள் கலந்து கொண்டுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி இருந்தது. இதையடுத்து இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் நாளை பாகிஸ்தானை சந்திக்கிறது. இந்த ஆட்டம் துபாயில் நடக்கிறது.
நாளைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கான வாய்ப்பில் நீடிக்க முடியும் என்பதால் பாகிஸ்தான் வெற்றிக்காக கடுமையாக போராடும். அதேவேளையில், நாளை பாகிஸ்தானை வீழ்த்தினால் கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும் என்பதால் இந்திய அணியும் முழு வீச்சில் தங்களது திறனை வெளிப்படுத்தும். இதனால் நாளைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்நிலையில் நாளைய போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மாபெரும் வரலாற்று சாதனை ஒன்றினை நிகழ்த்த காத்திருக்கிறார். அதாவது, இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் 298 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் 286 இன்னிங்ஸ்களில் களம் இறங்கி 13 ஆயிரத்து 985 ரன்கள் அடித்துள்ளார். இதில் 50 சதம் மற்றும் 73 அரைசதம் அடங்கும்.
இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான நாளைய போட்டியில் விராட் மேலும் 15 ரன்களை அடிக்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 14,000 ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 14 ஆயிரம் ரன்களை கடந்த இரண்டு வீரர்களாக சச்சின் மற்றும் சங்கக்காரா ஆகியோர் மட்டுமே உள்ளனர். சச்சின் தனது 350-வது இன்னிங்சில் 14,000 ரன்களையும், சங்கக்கார 378-வது இன்னிங்சில் 14,000 ரன்களையும் கடந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.