தென் மாநிலங்களில் இந்தி திணிப்பு விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களில் பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆர்டர் போட்டுள்ளார்.

ஸ்டாலின் ரூட்டை எடுக்கும் ரங்கசாமி:

மத்திய பாஜக அரசின் புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான், தமிழ்நாட்டிற்கு ரூ. 2,152 கோடி கல்வி நிதி ஒதுக்கப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார். இது, தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

தேசிய கல்வி கொள்கையின் மூலம் இந்தியை திணிக்க பாஜக முயற்சிப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு முன்வைத்தார். இதற்கு பாஜக கடுமையாக எதிர்வினை ஆற்றி வருகிறது. இந்த நிலையில், அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களில் பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் பூஜ்ய நேரத்தின்போது, சுயேச்சை எம்.எல்.ஏ ஜி. நேரு என்கிற குப்புசாமி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் ரங்கசாமி, "கடை உரிமையாளர்கள் தங்கள் நிறுவனப் பெயர் பலகைகளை தமிழில் வைப்பதை உறுதி செய்யும் வகையில், சுற்றறிக்கை மூலம் கடுமையான வழிமுறைகள் வெளியிடப்படும்" என்றார்.

தமிழில் பெயர் பலகை:

தமிழில் பெயர் பலகைகளை வைக்க எந்தவிதமான தயக்கமும் இருக்கக்கூடாது என்றும், தமிழ் மொழியை மதிக்க கடுமையான வழிகாட்டுதல்களுடன் சுற்றறிக்கைகளை வெளியிட வேண்டும் என்றும் அரசிடம் சுயேச்சை எம்.எல்.ஏ ஜி. நேரு என்கிற குப்புசாமி கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் ரங்கசாமி, "அரசுத் துறை விழாக்களுக்கான அனைத்து அழைப்பிதழ்களிலும் தமிழ் பதிப்பு இடம்பெற வேண்டும் என்றும் அரசாங்கம் முடிவு செய்திருந்தது. இது தமிழ் மொழியின் மீதான அன்பு மற்றும் மரியாதையின் வெளிப்பாடாகும்" என்றார்.

பாஜக கூட்டணியில் இருந்தாலும் தமிழக முதல்வர் ஸ்டாலினின் ரூட்டை முதல்வர் ரங்கசாமி எடுத்திருப்பது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

முன்னதாக மும்மொழி விவகாரத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கொந்தளித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம், "அனைத்து மாநிலங்களிலும் தாய்மொழிதான் முதல் மொழியாக இருக்க வேண்டும். நம் மாநிலத்திலாவது 2வது மொழியைக் கற்பிக்க முயற்சி செய்து வருகிறோம்.

ஆனால், பல மாநிலங்களில் ஆங்கிலத்தைக் கற்பிக்க முயற்சி செய்வது இல்லை. இதில் 3வது மொழி வேறு. 3வது, 4வது மொழிகள் நம் எதிரிகள் இல்லை. முதலில் 2வது மொழியைக் கற்றுக் கொடுங்கள்" என்றார்.