ARTICLE AD BOX

image courtesy: AFP
துபாய்,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேச அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்த தொடரில் கடந்த 19ம் தேதி கராச்சியில் நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதின.
இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 60 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் தோல்வி கண்ட பாகிஸ்தான் தனது அடுத்த லீக் ஆட்டத்தில் வரும் 23ம் தேதி இந்திய அணியை துபாயில் சந்திக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், மற்ற அணிகளுக்கு எதிரான போட்டியை போலவே இந்தியாவுக்கு எதிரான போட்டியையும் பார்ப்பதாக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூப் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடவுள்ளோம் என்ற அழுத்தம் எங்களுக்கு இல்லை. அனைத்து வீரர்களும் ரிலாக்ஸாக இருக்கிறார்கள்.
மற்ற அணிகளுக்கு எதிரான போட்டியில் விளையாடுவதை போன்றே இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் விளையாட உள்ளோம். இந்திய அணியை துபாயில் இதற்கு முன்னர் இரண்டு முறை வீழ்த்தி உள்ளோம். அதனால், துபாய் ஆடுகளங்களின் தன்மை எப்படி இருக்கும் என்பது எங்களுக்கு தெரியும். போட்டி நாளன்று ஆடுகளத்தின் தன்மையை பொறுத்தே அனைத்து திட்டங்களும் இருக்கும்.
அணியில் சைம் அயூப் மற்றும் பக்கார் ஜமான் இல்லாதது எங்களுக்கு பின்னடைவாக உள்ளது. ஆனால், எங்கள் அணியில் சிறப்பாக செயல்பட்டு போட்டியை வென்று கொடுக்கும் வீரர்கள் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.