சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: பலம் வாய்ந்த நியூசிலாந்தை சமாளிக்குமா வங்காள தேசம்..?

3 hours ago
ARTICLE AD BOX

ராவல்பிண்டி,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்த நிலையில் ராவல்பிண்டியில் இன்று நடைபெற உள்ள 6-வது லீக்கில் வங்காள தேச அணி, பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வெற்றியோடு தொடங்கிய நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை துவம்சம் செய்தது. அந்த ஆட்டத்தில் வில் யங்கும், டாம் லாதமும் சதம் அடித்தனர். பந்து வீச்சில் கேப்டன் சான்ட்னெர், வில்லியம் ஓர் ரூர்கே, மேட் ஹென்றி மிரட்டினர்.

சூப்பர் பார்மில் உள்ள நியூசிலாந்து, வங்காளதேசத்தையும் வீழ்த்தினால் அரைஇறுதியை உறுதி செய்து விடும். அண்மையில் முத்தரப்பு தொடரில் பட்டம் வென்ற நியூசிலாந்து அணியினர், பாகிஸ்தானில் உள்ள சூழலில் தங்களை நன்கு பழக்கப்படுத்திக் கொண்டுள்ளனர். அதனால் இன்றைய ஆட்டத்திலும் அவர்களே ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்காளதேச அணி தனது முதல் லீக்கில் இந்தியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதுவும் 35 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடிய வங்காளதேசத்தை ஹிரிடாயும் (100 ரன்), ஜேக்கர் அலியும் (68 ரன்) இணைந்து 200-ஐ கடக்க வைத்தனர். இல்லாவிட்டால் இன்னும் மோசமாக தோற்று இருப்பார்கள்.

இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே வங்காளதேச அணியால் அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க முடியும். தோற்றால் வெளியேற வேண்டியது தான். தசைப்பிடிப்பால் கடந்த ஆட்டத்தில் விளையாடத மக்முதுல்லா அணிக்கு திரும்புவார் என்று தெரிகிறது. இருப்பினும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக திகழும் நியூசிலாந்தை சமாளிப்பது கடினம் என்று கூறப்படுகிறது.

இரு அணி வீரர்களில் உத்தேச பட்டியல்:-

வங்காளதேச அணி

தன்சித் ஹசன், சவுமியா சர்க்கார், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), மெஹதி ஹசன் மிராஸ், தோவிட் ஹிரிடோய், முஷ்பிகுர் ரஹீம் (வி.கீ.), ஜேக்கர் அலி, ரிஷாத் ஹொசைன், தன்சிம் ஹசன், டாஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரகுமான்

நியூசிலாந்து அணி

வில் யங், டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம் (வி.கீ.), க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), நாதன் ஸ்மித், மேட் ஹென்றி, வில் ஓ'ரூர்க்கி

Read Entire Article