ARTICLE AD BOX
துபாய்: சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் பாகிஸ்தான் பங்கேற்றாலே ஹர்திக் பாண்டியா சிறப்பாக பவுலிங் செய்து இந்திய அணிக்கு வெற்றி தேடித் தருவார் என்று கூறும் வகையில் அவரது செயல்பாடு அமைந்துள்ளது. அது மட்டுமின்றி ஹர்திக் பாண்டியா இடம்பெற்று இருந்த 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடரின் போட்டிகள் மற்றும் 2024 டி20 உலகக் கோப்பை போட்டிகள் அனைத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று உள்ளது.
தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று இருக்கிறது. இதை அடுத்து ஹர்திக் பாண்டியா இருந்தாலே இந்திய அணி வெற்றி பெறும், குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவர் சிறப்பாக பவுலிங் செய்வார் என்பதற்கான சாதனை ஒன்று நிகழ்ந்து இருக்கிறது.

இந்தியா - பாகிஸ்தான் மோதிய போட்டியில் முகமது ஷமிக்கு காலில் ஏற்பட்ட வலி காரணமாக பவர் பிளே ஓவர்களின் இடையே ஆடுகளத்தை விட்டு வெளியேறி இருந்தார். அந்த இக்கட்டான நேரத்தில் ஹர்திக் பாண்டியா சிறப்பாக பந்து வீசி முதல் விக்கெட்டை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் அவர் எட்டு ஓவர்களில் 31 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்திய அணியிலேயே மிகக் குறைந்த ரன்கள் விட்டுக் கொடுத்ததோடு இரண்டு விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் ஹர்திக் பாண்டியா சில சாதனைகளையும் படைத்து இருக்கிறார்.
சர்வதேச போட்டிகளில் மொத்தம் 200 விக்கெட்களை பாண்டியா வீழ்த்தி இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் 17 விக்கெட்களையும், டி20 போட்டிகளில் 94 விக்கெட்களையும், ஒருநாள் போட்டிகளில் 89 விக்கெட்களையும் அவர் வீழ்த்தி இருக்கிறார். அவர் தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதில்லை என்றாலும் இந்த அரிய சாதனையை செய்து இருக்கிறார். டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஹர்திக் பாண்டியா இரண்டாவது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
IND vs PAK: "எங்க தலையெழுத்து எங்க கையில் இல்லை" கதறிய பாகிஸ்தான் கேப்டன்.. தோல்விக்கு பின் பேச்சு
பேட்ஸ்மேனாகவும் இதுவரை சிறப்பாக செயல்பட்டு இருக்கும் ஹர்திக் பாண்டியா டெஸ்ட் போட்டிகளில் 532 ரன்களையும், டி20 போட்டிகளில் 1812 ரன்களையும், ஒருநாள் போட்டிகளில் 1805 ரன்களையும் குவித்து இருக்கிறார். இதைத் தவிர்த்து சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஹர்திக் பாண்டியா அபாரமான சாதனை ஒன்றை செய்து இருக்கிறார்.
இதுவரை பாகிஸ்தான் அணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவராக ஹர்திக் பாண்டியா இருக்கிறார். தற்போது அதில் மேலும் ஒரு மைல் கல்லாக பாகிஸ்தானுக்கு எதிராக 15 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். டி20 உலகக் கோப்பை, ஒருநாள் போட்டி உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் மட்டும் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
இந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அவர் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அடுத்த மூன்று இடங்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் உள்ளனர். ஆஷிஷ் நெஹ்ரா 10 விக்கெட்டுகளும், ரவீந்திர ஜடேஜா 10 விக்கெட்டுகளும், இர்பான் பதான் 9 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.